×

பெண் குழந்தை பிறப்பு விகிதம் கடும் சரிவு: நவீன முறை கருக்கலைப்புகள் அதிகரிப்பு... மீண்டும் தலைதூக்கிய கள்ளிப்பால் கொலை

* அரசின் தொட்டில் குழந்தை திட்டம் தோல்வி
* பாலியல் வன்முறை அதிகரிக்கும் அபாயம்

சென்னை: தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்து வரும் நிலையில் மீண்டும் கள்ளிப்பால் கொலைகள் தலைதூக்கி இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தால் தமிழகத்தில் குறைந்து விட்டதாக கருதப்பட்ட பெண் சிசுக்கொலைகள் ஒழிந்தபாடில்லை. வேண்டாத பெண் சிசுக்களை விதிகளில் தூக்கி எரியும் துயரங்கள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது.

அதன் உச்சமே உசிலம்பட்டியில் அண்மையில் அரங்கேறிய கள்ளிப்பால் கொலை. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட பெற்றோர் கைது செய்யப்பட்டாலும், இது போன்ற படுகொலைகள் கிராம் புறங்களில் மீண்டும் தலைதூக்கி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கள்ளிப்பால் மட்டுமின்றி, முகத்தை ஈரத்துணியால் மூடுதல், தொண்டையில் நெல்மணியை போடுதல், தொட்டிலை வேகமாக ஆட்டி விடுதல் போன்றவையும் பிறந்த பெண் சிசுவுக்கு எதிராக அரங்கேறும் வன்முறை. அவற்றை தடுக்கும் வகையில் 1992-ம் ஆண்டு தமிழகத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகம் செய்யப்பட்டது தான் தொட்டில் குழந்தை திட்டம்.

இப்போது அதன் நிலை கேள்விக்குறியாகி விட்டது. தொட்டில் குழந்தை திட்டத்தால் 1,000ஆண்களுக்கு 853 என்றிருந்த பிறப்பு விகிதம் 1,000 ஆண்களுக்கு 935 பெண்கள் என முன்னேற்றம் கண்டது. அதில் இப்போது மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சேலம், தருமபுரி, நாமக்கல், ராமநாதபுரம், திருவள்ளூர், அரியலூர், திருவண்ணாமலை, தேனி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. குழந்தை பிறப்பை கண்காணிக்கும் நிர்வாக நடைமுறைகளை அரசு வலுப்படுத்த வேண்டும்.

சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபடுவோர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவதோடு அவர்களுக்கு துணை போகும் அரசு பணியாளர்களையும் கடும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். அதன் மூலமே பெண் குழந்தைகளை பாதுகாக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.


Tags : Rapid , Female childbirth, birth rate, severe decline
× RELATED சொந்த ஊர் சென்று வாக்களிக்க வசதியாக 10,124...