×

காவேரிப்பாக்கம் ஊராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆலப்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கன்னிகாபுரம், தச்சம்பட்டறை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் செங்கல் சூளை தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் மூன்றரை ஏக்கர் பரப்பளவில் கோவிந்தன் குட்டை என்ற நீர்நிலை உள்ளது. மழைக்காலங்களில் இந்த குட்டையில் தண்ணீர் நிரம்பும்போது சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் கால்நடைகளுக்கும், விவசாயிகளுக்கும் பயன்பட்டு வந்தது.

ஆனால் தற்போது இந்த நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி இருந்த இடமே தெரியாத நிலையில் உள்ளது. இங்கு தானிய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் சேமிக்க முடியாமலும், கால்நடைகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்ததாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே அரசு அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கியுள்ள நீர்நிலையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Kaveripakkam , Kaveripakkam Panchayat, Aquatic Occupation
× RELATED அவளூர் தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தம்...