×

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கித் தவிக்கும் ஆவடி காமராஜர்நகர் மெயின் சாலை

ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட காமராஜ் நகர் பிரதான சாலையில் 1 முதல் 10 தெருக்கள் வரை உள்ளது. இங்குள்ள ஸ்ரீதேவி நகர், ஐயப்பன் நகர், ஆனந்தம் நகர், அருணாச்சலம் நகர், மேட்டுப்பாளையம் மற்றும் கண்ணம்பாளையம் பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இச்சாலையில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், மாநகராட்சி மருத்துவமனை, கோயில்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளது.
காமராஜர் நகர் மெயின் சாலை காலை, மாலை வேளைகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பாக காணப்படுகிறது. தற்போது இந்த சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். மேலும் சாலை ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது; காமராஜ் நகர் பிரதான சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக கிடக்கிறது. சில மாதங்களுக்கு முன் சாலையை பாதி தூரத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீரமைத்தனர். இரு சக்கர வாகன ஓட்டிகளும் குண்டும் குழியுமான சாலையில் விழுந்து காயம் அடைகின்றனர்.  இப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் சைக்கிளில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். சாலையின் இருபுறங்களிலும் உள்ள மழைநீர் கால்வாய் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் மண் குவிந்து கிடக்கிறது. காமராஜ் நகர் பிரதான சாலை ஆரம்ப காலத்தில் 40 அடியாக இருந்தது.  ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் 25 அடியாக சுருங்கி போய் உள்ளது.

வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ளன. சாலை ஓரத்தில் வர்த்தக நிறுவன விளம்பர பலகைகள், அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் பேனர்கள், இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் நடமாட முடியவில்லை. சாலை ஓரத்தில் ஆங்காங்கே குப்பை குவிந்து கிடக்கின்றன. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காமராஜ் நகர் பிரதான சாலையை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

Tags : Kamarajarnagar Main Road ,Avadi , Avadi Kamarajarnagar, Main Road
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!