×

நெல்லையில் ஸ்மார்ட்சிட்டி பணிகளுக்காக அடுத்தடுத்து காலியாகும் கட்டிடங்கள்

நெல்லை: நெல்லையில் ஸ்மார்ட்  சிட்டி திட்டத்திற்காக அடுத்தடுத்து நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், பாளை. பஸ் நிலையம், ெநல்லை டவுன் போஸ் தினசரி சந்தை ஆகியவை காலி செய்யப்படுவதால் மாற்று இடமின்றி வியாபாரிகள் தவிக்கின்றனர். நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் இடிக்கப்பட்டு புதிய அடுக்குமாடி பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அடுத்தகட்டமாக பாளை. பஸ் நிலையமும் இடித்து புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்காக வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் நெல்லை டவுனில் உள்ள 100 ஆண்டு பழமைவாய்ந்த போஸ் தினசரி சந்தையை இடித்து  அப்புறப்படுத்தி புதிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. 1 ஏக்கர் 5 சென்ட் அளவில் அமைந்துள்ள இந்த சந்தையில் 220 சிட்டிங் கடைகள், 8 பிளாக்குகளில் 86 கடைகள், மற்றும்  வெளிப்பகுதியில் 30 கடைகளில் காய்கனி, பலசரக்கு வியாபாரம் நடந்து வருகிறது. 500க்கும் மேற்பட்ட  நேரடி வியாபாரிகள் மற்றும் அவர்களிடம் பணி செய்யும் 2 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். அதிகாலை 5  மணி முதல் நள்ளிரவு 11 மணிவரை இந்த சந்தை பரபரப்புடன் இயங்குகிறது.

நெல்லை  டவுன் பகுதி மட்டுமின்றி மாநகர் மற்றும் அருகே உள்ள கிராமங்களில் இருந்தும்  தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்குவந்து காய்கனி, மளிகை பொருட்களை  வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு  பரபரப்பாக இயங்கும் இந்த சந்தையை இடித்து அகற்றிவிட்டு புதிய வணிக வளாகம்  கட்டப் போவதாக மாநகராட்சி இங்குள்ள வியாபாரிகளுக்கு கடந்த செப்டம்பர்  மாதம் நோட்டீஸ் வழங்கியது. 15 நாட்கள் அவகாசத்தில் வழங்கப்பட்ட நோட்டீசில்  ஏற்கனவே டென்டர் விடப்பட்ட தகவலும் இருந்ததால் வியாபாரிகள்  அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மதுரை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தனர். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் இவர்களுக்கு ஆதரவாக  வந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசினார். இந்த நிலையில் மாற்று இடம்  வழங்கவும், கட்டி முடித்த பின்னர் ஏற்கனவே இருந்தவர்களுக்கு முன்னுரிமை  அடிப்படையில் கடைகள் வழங்கவும் மதுரை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல் உத்தரவை  பிறப்பித்தது. எனவே ெபாருட்காட்சி மைதானத்தில் வியாபாரிகள் அனைவருக்கும்  விடுபடாமல் கடை வழங்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை  வைத்தனர். இதற்காக பொருட்காட்சி மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும்  வியாபாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு டவுன் போஸ் மார்க்கெட் இடிக்கப்பட உள்ளது.

நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தை இடித்து  அகற்றிவிட்டு ரூ.79 கோடி மதிப்பில் புதிய நவீன வசதிகளுடன் அடுக்குமாடி  பஸ் நிலையம் கட்டுவதற்காக கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதற்காக நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டது.  நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் காலி செய்த வியாபாரிகளுக்கு பார்வதி தியேட்டர் அருகே, நயினார்குளம் மார்க்கெட் பகுதி, பாளை. பஸ் நிலையம், நூற்றாண்டு மண்டபம் ஆகிய இடங்களில் மாற்று இடம் ஒதுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்தது. இதற்காக பாளை. பஸ் நிலையத்தில் 5 கடைகள் கட்டப்பட்டு ஒதுக்கப்பட்டன.

இதேபோல் பாளை. பஸ் நிலையத்தையும் இடித்து விட்டு ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்காக அங்குள்ள 60 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அங்குள்ள வியாபாரிகள் போராட்டம், உண்ணாவிரதம் நடத்திய பிறகே மாநகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அவர்களுக்கும் மாற்று இடம் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்து நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், பாளை. பஸ் நிலையம், நெல்லை டவுன் போஸ் மார்க்கெட் ஆகியவை காலி செய்யப்படுவதால் மாற்று இடமின்றி வியாபாரிகள் தவிக்கின்றனர்.

ஏற்கனவே நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என அறிவித்த நிலையில் தற்போது 15 மாதங்கள் ஆகிவிட்டது. தற்போதுதான் அஸ்திவார கான்கிரீட் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் சந்திப்பு பஸ் நிலையம் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் பணிகளை முடித்து பஸ்களை சந்திப்பு பஸ் நிலையத்திற்குள் கொண்டு வந்து விடுவோம் என மாநகராட்சி நிர்வாகம் கூறினாலும், அது சாத்தியமா? அதற்குள் பணிகள் முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு முடிந்தாலும் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் கட்டுமானப் பணிகள் முழுவதும் முடிந்த பின்னரே வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்படும். அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என வியாபாரிகள் கவலை ேதாய்ந்த முகத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் பெரும்பாலான வியாபாரிகள்  மாற்று இடம்  இல்லாமல் தொழில் பாதிப்படைந்துள்ளனர். அவர்களிடம் பணி  செய்தவர்கள், மறைமுக  பணியாளர்கள் என பல தரப்பினர் வேலை இழந்துள்ளனர்.

நெல்லை  சந்திப்பு பஸ் நிலைய பகுதியில்  கடை நடத்தி வந்த வியாபாரிகள் கூறுகையில், நெல்லை சந்திப்பு பஸ் நிலைய  வளாகத்தில் 144 கடைகள் இருந்தன. கடந்த 2018ம் ஆண்டு தீபாவளிக்கு பின்னர்  அனைத்து கடைகளையும் அகற்றிவிட்டனர். அதன்  பின்னரும் பணிகள் வேகமாக  தொடங்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாகத்தான் அஸ்திவார பில்லர்  அமைக்கின்றனர். இங்கு கடைகளில் பணியாற்றிய பலரும்  வேலையின்றி பரிதாப நிலையில் தவிக்கின்றனர். பஸ் நிலையம் பணிகள் முடிந்து  வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்ய  இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேலாகும்  என்கின்றனர். இதனால் வியாபாரிகள், இந்த கடைகளில் பணியாற்றி வந்தவர்கள் வேலை  இழந்து நிற்கின்றனர். எனவே புதிதாக பஸ் நிலையம் கட்டி முடித்த பிறகு  இங்கு கடை நடத்தியவர்களுக்கு முன்னுரிமை  அடிப்படையில் மாநகராட்சி கடை  வழங்க வேண்டும், என்றனர்.

நெல்லை மாநகரை பொலிவுறு நகரமாக அழகுபடுத்தும் திட்டமாக இருந்தாலும், ஒரே நேரத்தில் இத்திட்டங்களை  மேற்கொள்வது ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை இழப்பையும், மாநகராட்சிக்கு  வருவாய் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே  ஒவ்வொரு திட்டத்தையும் முடித்து விட்டு அடுத்த திட்டத்தை  கையில் எடுத்து யாருக்கும் பாதிப்பு வராத வகையில் செய்து முடிக்க வேண்டும்.  வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி  கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தவும் வேண்டும். அப்போது தான் குறிப்பிட்ட  காலத்திற்குள் பணிகள் நிறைவு பெறும்.

விரைவில் புதிய வடிவம் பெறும்

நெல்லை மாநகராட்சி கமிஷனர்  கண்ணன் கூறுகையில், ‘‘ஸ்மார்ட் சிட்டியில் நெல்லை மாநகராட்சியில் பல்வேறு  பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. மாநகர் வளர்ச்சி பெறும்போது புதுப்பிப்பு  பணிகள் அவசியமாகிறது. அந்த வகையில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் தற்போது  புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள வியாபாரிகளுக்கு டவுன், பாளையில்  தகுந்த இடங்களை அளித்துள்ளோம். அதேபோல் விரைவில் டவுன் மார்க்கெட் மற்றும்  பாளை பஸ் நிலையம் புதுப்பிப்பு பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது. டவுன்  மார்க்கெட் வியாபாரிகளுக்கு தேவையான கடைகளை மாநகராட்சி எதிரேயுள்ள  பொருட்காட்சி திடலில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். பாளை பஸ் நிலைய  வியாபாரிகளுக்கு சித்தா கல்லூரி எதிரே கடைகளை வைத்திட ஏற்பாடுகள் நடந்து  வருகிறது. நெல்லை மாநகரம் விரைவில் புதிய வடிவம் பெறும்’’ என்றார்.

தமிழகத்தின் சைவ சந்தை

திமுக முன்னாள் எம்எல்ஏவும், நெல்லை டவுன் போஸ் மார்க்கெட் வியாபாரிகள்  சங்க ஆலோசகருமான மாலை  ராஜா கூறியதாவது: நெல்லை சந்திப்பு பஸ் நிலைய   கட்டிடங்கள், பாளை பஸ் நிலைய கடைகள், போஸ் மார்க்கெட் என அடுத்தடுத்து வணிக  வளாகங்கள்  இடிக்கப்படுகின்றன. ஒரு பணியை முழுமையாக முடிக்காமல் அவசர  கதியில் ஏன்  எல்லா கட்டிடங்களையும் இடிக்க ஆவல் காட்டுகின்றனர் என  தெரியவில்லை. தமிழகத்தின் ஒரே சைவ சந்தை என பெயர் பெற்றது தான்  நெல்லை டவுன் போஸ் மார்க்கெட். 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இங்கு முட்டை கூட  விற்பது இல்லை. இந்த மார்க்கெட் மூலம் நேரடியாகவும், மறைமுகமாவும் தினமும் சுமார் 2 ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஓராண்டுக்கு முன்னரே டென்டர் போட்டு விட்டு திடீரென 15 நாள் அவகாசத்துடன் கடைகளை  காலி செய்யக்கூறி நோட்டீஸ் வழங்கினர்.

செய்வதறியாது திகைத்த வியாபாரிகள்  மதுரை உயர்நீதிமன்றத்தை நாடினர். அவர்கள் கொடுத்த வழிகாட்டுதல் மற்றும்  வியாபாரிகளின் நியாயமான கோரிக்ககள் மற்றும் மாநகராட்சி அளித்த அனைத்து  உத்தரவாதங்களையும் நிறைவேற்றினால் மட்டுமே இந்த இடத்தை காலி செய்து  பொருட்காட்சி மைதான தற்காலிக கடைகளுக்கு செல்வோம். அங்கு 8க்கு 8 அடி  அளவில் 86 கடைகள் மட்டும் அமைக்கப்படுவதாக கேள்விப்படுகிறோம். இங்குகடை  நடத்துபவர்கள் அனைவருக்கும் பாதகமற்ற வாழ்வாதார நிலையை மாநகராட்சி  ஏற்படுத்தித் தர வேண்டும். புதிய மார்க்கெட் கட்டி முடித்த பிறகும் இங்கு வியாபாரம் செய்த  அனைவருக்கும் முன்னுரிமையில் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : buildings ,SmartCity ,Nellie , Smart City
× RELATED இன்று மற்றும் நாளை இயக்கப்படுவதாக...