×

முழுவதும் பெண்களால் இயக்கப்படும் ரயில்: கேரளாவில் இன்று ஓடுகிறது

திருவனந்தபுரம்: மார்ச் 8ம் தேதி ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இன்று வழக்கம்போல மகளிர் தினம் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்களைப் போலவே பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். இரு சக்கர வாகனத்தில் தொடங்கி விமானங்களை வரை பெண்கள் தனியாக இயக்கி தங்களது திறமையை பறைசாற்றி வருகின்றனர். இதேபோல ரயில்வே துறையிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூரு-மைசூரு இடையே ஓடும் ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயிலை 2 பெண் லோக்கோ பைலட்டுகள் மட்டுமே இயக்கி சாதனை படைத்தனர்.

இந்நிலையில் கேரளாவில் ஒரு ரயிலை முழுக்க பெண்களே இயக்கி சாதனை படைக்க உள்ளனர். திருவனந்தபுரம்-சொரணூர் இடையே ஓடும் வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் (எண்: 16302) ரயிலைத் தான் இன்று முழுக்க முழுக்க பெண்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைக்க உள்ளனர். இந்த ரயிலில் வழக்கமாக 2 லோக்கோ பைலட்டுகள். தலா ஒரு கார்டு மற்றும் ஒரு டிக்கெட் பரிசோதகர் ஆகிய 4 பேர் பணியில் இருப்பார்கள். இந்த ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட 3 பெட்டிகள் மட்டுமே உண்டு. மற்ற பெட்டிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டிகளாகும். இந்த ரயிலை திருவனந்தபுரம் முதல் எர்ணாகுளம் வரை ஒரு குழுவினரும், பின்னர் எர்ணாகுளத்திலிருந்து சொரணூர் வரை இன்னொரு குழுவினரும் இயக்குவார்கள். இன்று எர்ணாகுளம் முதல் சொரணூர் வரை இந்த ரயிலை முழுக்க முழுக்க பெண்களே இயக்க உள்ளனர்.

இந்த ரயிலை இயக்குவதற்கு தலைமை லோக்கோ பைலட்டாக எர்ணாகுளத்தை சேர்ந்த டி.ஜே.கொரேத்தி, உதவி லோக்கோ பைலட்டாக வித்யாதாஸ், டிக்கெட் பரிசோதகராக கீதா குமாரி மற்றும் கார்டாக ஸ்ரீஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர பாயின்ட்ஸ்மென், டிராக்மென், கேட் கீப்பர், டிக்கெட் புக்கிங் அலுவலகம், சிக்னல், தகவல் மையம், கேரேஜ் மற்றும் கேரேஜ் ஆகியவற்றிலும் முழுக்க முழுக்க பெண்கள் பணியில் இருப்பார்கள். நேற்று முன்தினம் இந்த ரயிலில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது, இதில் 4 பெண்களும் வெற்றிகரமாக ரயிலை இயக்கினர். இன்று தங்களால் வெற்றிகரமாக ரயிலை இயக்க முடியும் என்று 4 பெண்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சாதனை படைக்க உள்ள இந்த 4 பெண்களுக்கும் கேரள சுகாதாரம் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஷைலஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : Kerala ,Thiruvananthapuram , Thiruvananthapuram
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது