×

மலையோர குடியிருப்புகளுக்கும் ஆபத்து: குமரியில் பற்றி எரியும் மலைக்குன்றுகள்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் தீயில் எரிந்து அழிந்து வருவதுடன், மலையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தீ விபத்துக்களை கட்டுப்படுத்த வனத்துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மந்த நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

குமரி மாவட்டம் வட பகுதி முழுவதும் மலைகளாலும், தென் பகுதி முழுவதும் கடலாலும் சூழப்பட்ட, இயற்கை எழில் நிறைந்த மாவட்டம் ஆகும். இங்குள்ள மலைப்பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் ஹாட் ஸ்பாட் என அழைக்கப்படும் மேற்கு தொடர்ச்சி மழையின் அடிவாரத்தில் வருகிறது. குமரி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 30 சதவீதம் வனப்பகுதிகளாகும்.50 ஆயிரத்து 486 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த வனப் பகுதியில் 45 ஆயிரத்து 777 ஹெக்டேர் பகுதி வன உயிரின சரணாலயப் பகுதிகளாக பாதுகாக்கப்படுகிறது. பசுமை மாறா காடுகள், வறட்சியைத் தாங்கி வளரும் முள்காடுகள் என 14 வகையான காடுகள் இங்கு உள்ளன. 800 க்கும் மேற்பட்ட மர வகைகளும், 30க்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்களும் இங்குள்ளன.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் கடும் கோடை நிலவும் மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் வரை குமரி மாவட்ட காடுகளில்  தீ பாதிப்பு ஆங்காங்கே நிகழ்ந்து வருவது வாடிக்கையாகும். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் தீ விபத்துக்கள் காடுகளில் அடிக்கடி நிகழும். இது போன்ற பாதிப்புகளை தடுக்க தீ தடுப்பு வேலிகள் அமைப்பார்கள். காடுகளில் இடைவெளிகள் ஏற்படுத்தப்படும் போது தீ ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரவாது. மேலும் தீ தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு இருப்பார்கள். ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக அது மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்வார்கள்.

இதன் மூலம் காடுகளில் வேகமாக தீ பரவுவது தடுக்கப்படும். ஆனால் சில ஆண்டுகளாக கோடைகளில் ஏற்படும் தீ விபத்துக்களை வனத்துறையால்  கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வில்லை. இந்த ஆண்டு கடந்த ஜனவரி இறுதியில் இருந்தே காடுகள் பற்றி எரிந்து வருகின்றன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மரங்கள் மற்றும் மூலிகைகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி 50 கி.மீ. தொலைவுக்கு தீ  தடுப்புக் கோடுகள் வெட்டப்படுகின்றன.  மேலும் தீ தடுப்புக் காவலர்களும் தேவையான அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று வனத்துறை தரப்பில் கூறப்பட்டாலும் தீ விபத்துக்கள் நிகழும் போது அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை.

இங்குள்ள  வனப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட காணிக் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். வன பகுதி தான் இவர்களின் வாழ்வாதாரம் ஆகும். தொடர் தீ விபத்துக்கள் காணி இன மக்களின் வாழ்வாதாரத்தையும் புரட்டி போடுகிறது. மேலும் மலை பகுதியின் அடிவாரத்தில் வசிக்கும் சாதாரண மக்களையும் தீ விபத்து அச்சுறுத்தலாக்கி உள்ளது. நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் தீ விபத்துக்கள், மனித உயிருக்கு உலை வைப்பதாக உள்ளன. வெளிநாடுகளில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்களில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியாவிலும் கோடை தீ விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன் பேரில் தமிழகத்தில் தீயணைப்பு துறை இயக்குனரும், டிஜிபியுமான சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தீயணைப்பு துறை சார்பில் மலையோர பகுதிகளில் வனத்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகிறார்கள்.

 குமரி மாவட்டத்தை பொறுத்தவரை மலை பகுதிகளுக்கு செல்ல கூடிய நவீன வாகன வசதிகள் தீயணைப்பு துறையிடம் இல்லை. இங்குள்ள தீயணைப்பு துறை வண்டிகள் மூலம் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் செல்ல முடியாது. இதனால் பெரும்பாலும் தீயணைப்பு துறையினர் இலைகளை வெட்டி தீயணைப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இது முற்றிலும் அணைவது இல்லை. சிறிது நேரத்தில் காற்று வேகமாக வீசும் போது மீண்டும், மீண்டும் தீ பிடித்து எரிய தொடங்கி விடுகிறது. வனப்பகுதிகள் என்பது மிகவும் முக்கியமானதாகும். காடுகள் இருந்தால் தான் மழை பொழியும். ஏற்கனவே வன பகுதிகள் மனித தவறுகளால் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீ விபத்துக்களால் இப்போது காடுகள் எரிவது  மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக வன ஆர்வலர்கள் கூறி உள்ளனர். வன பகுதியில் தீயை கட்டுப்படுத்த போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை வனத்துறை மேற்கொள்ள வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கை ஆகும்.

Tags : Endangered Mountain Residents: Burning Mountains About Kumari , Mountaintops
× RELATED ஒட்டன்சத்திரம் மற்றும்...