×

மந்தமான பாதாள சாக்கடை பணியால் ஊரெல்லாம் சிதிலமடைந்த சாலைகள்.. போக்குவரத்து நெரிசலில் திணறி ரணமாகும் ராசிபுரம்

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய நகராட்சிகளில் ஒன்றாக இருப்பது ராசிபுரம். லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த நகராட்சியில் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், கோயில்கள் ஏராளமாக உள்ளது. ஆனால் இங்குள்ள சாலைகள் அனைத்தும் குறுகலாகவே உள்ளது. அதிலும் பாதாள சாக்கடை பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு அனைத்து சாலைகளும் சிதிலமடைந்து கிடக்கிறது. நகரை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகளும் இல்லாமல் இருக்கிறது. எனவே ராசிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நகராட்சி ராசிபுரம். இது ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட பழமையான நகரம். பேளுக்குறிச்சி, மெட்டலா, நாமகிரிப்பேட்டை, போதமலை, முள்ளுக்குறிச்சி என்று சுற்று வட்டார பகுதி கிராமப்புற மக்கள், எந்த ஒரு தேவைக்கும் ராசிபுரம் வந்து செல்வது வழக்கம். இதனால் ராசிபுரம் நகரில் எப்போதும் வாகனங்களின் நெரிசலும், மக்களின் நடமாட்டமும் அதிகளவில் காணப்படுகிறது.

அதே நேரத்தில் குறுகிய சாலைகள் கொண்ட இந்நகரம் சாலை விரிவாக்கத்திற்கு வழியில்லாமல் உள்ளது. நாளுக்கு நாள் அதி்கரிக்கும் மக்கள் தொகை பெருக்கம், குடியிருப்புகள் அதிகரிப்பு, வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு, தொழில் வளர்ச்சி, கல்வி நிறுவனங்கள் அதிகரிப்பு  போன்றவற்றுக்கு ஏற்றவாறு சாலை வசதிகள் இல்லை. ஏற்கனவே இருக்கும் சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கான வசதிகளும் நகரில் அறவே இல்லை. இதனால் பழைய பஸ் நிலையம், கச்சேரித்தெரு, சிவானந்தா சாலை, கவரைத்தெரு, டிவிஎஸ்  சாலை, புதிய பஸ் நிலையம், பழைய நீதிமன்ற சந்திப்பு, பூக்கடை வீதி,  சின்னக்கடை வீதி, பெரியகடைவீதி, பட்டணம் சாலை போன்ற பகுதிகள் எப்போதும்  வாகன நெரிசல் மிகுந்ததாகவே உள்ளது. பள்ளி, அலுவலக நேரங்களில் இந்த நெரிசல்  மேலும் கூடுதலாக இருக்கும்.

இப்படிப்பட்ட சூழலில் கல்லூரி வாகனங்கள் நகரின் சுற்று வட்டச்சாலையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவை நகரில் வந்து செல்வதால், வாகன நெரிசல் என்பது மேலும் தொடர்கிறது. இதேபோல் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வாகனங்களில் வருவோரும் அதனை நிறுத்துவதற்கு போதிய வசதியில்லாத நிலை நீடித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஏதாவது ஒரு பகுதியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் சிக்கல் மேலும் அதிகரிக்கிறது. இது ஒரு புறமிருக்க,  நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள், சில ஆண்டுகளாக அப்படியே கிடக்கிறது. இவற்றின் மீது சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டிச் செல்வதால் குறுகிய சாலைகள் மேலும் சேதமடைகிறது. இதை உரிய நேரத்தில் சரி செய்ய நகராட்சி நிர்வாகம் போதிய  நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த வகையில் பல தெருக்களில் ஏற்பட்டுள்ள சாலைகளின் சேதம்  வாகன ஒட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை  ஏற்படுத்தி, விபத்து அபாயங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் பழுதடைந்த டிவிஎஸ் சாலை, சேலம் சாலை, பூக்கடை வீதி, நகர வங்கித்தெரு போன்ற முக்கிய சாலைகள் இன்னும் சீரமக்கப்படாததால், வாகன ஒட்டிகளின் சிரமத்தை அதிகரித்துள்ளது. போக்குவரத்து போலீசார், பல இடங்களில் நெரிசலை சீரமைக்க நிறுத்தப்பட்டிருந்தாலும், போதிய சாலை விரிவாக்க வசதிகள்  இல்லாததால் நெரிசல் குறைந்தபாடில்லை. இதே போல் நகரில் பழைய பஸ் நிலையம், கவரைத்தெரு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர கடைகள அதிக ஆக்கிரமிப்புகளாலும், கச்சேரி வீதி, பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதாலும் வாகன நெரிசல் அதிக சிரமைத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் குறுகிய தெருக்களில் குண்டு குழி சாலைகள், சாலையோர ஆக்கிரமிப்புகள், அதற்கு மத்தியில் அளவுக்கதிகமான போக்குவரத்து நெரிசல் என்று பல ஆண்டுகளாக ரணகளமாகி நிற்கிறது ராசிபுரம் நகரம். இதனை போக்க அரசும், நகராட்சியும், போலீசாரும், வர்த்தக பிரமுகர்களும் இணைந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Rasipuram ,city , Rasipuram
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து