×

சிங்கப்பெண்ணே... சிங்கப்பெண்ணே.. வானமும் கூட உன்னை வணங்குமே...

சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்என்றான் பாரதி. அந்த மகாகவி கண்ட கனவை, நனவாக்கி வருகின்றனர் பெண்கள். ஆம்... ஆண்களுக்கு நிகரான துறைகளிலும் கூட, தங்களாலும் சாதிக்க முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாகவே காட்டி வருகின்றனர். அந்த பெண்களை கொண்டாடும் தினம்தான் இன்று(மார்ச் 8). சாதனைகள் ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும், மறுபுறம் சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

கருவறையில் இருந்து துவங்கும் பெண்களுக்கு எதிரான கொடுமை, இவ்வுலகை விட்டு பிரியும் வரை தொடர்கிறது. இந்நிலையில், மீண்டும் ஒரு மகளிர் தினம் நம்மை கடந்து செல்கிறது. 1இந்தியாவில், குஜராத்தும், காஷ்மீரும் பெண்கள் மீதான வன்கொடுமைக்கு சாட்சிகளாக திகழ்கின்றன. அன்றாடம் பெண் சமூகம் அனுபவிக்கும் வேதனைகளும், கொடுமைகளும் ஏராளம். சமீபத்தில் கேரள மாநிலத்தில் ரயிலிலிருந்து கீழே தள்ளப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு இறந்துபோன சவுமியாவும், மணிப்பூரில் உண்ணாவிரத போராட்டத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு உடல் தளர்ந்துபோன எரோம் ஷர்மிளாவும் நிகழ்காலத்தின் உதாரணங்கள். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பாக கருதப்படும் வீடுகளில்கூட உடல், மனோரீதியான கொடுமைகளும், பாலியல் அராஜகங்களும் நடக்கிறது. இப்போதும் பெண்களின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக்கும் நிலையை நிர்பயா போன்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. பெண்மைக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியானது. பெண்களின் மானமும், சுதந்திரமும் குதறப்படும் சூழல்கள் எளிதாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டங்களை இயற்றுவது மட்டும் போதுமானதல்ல. பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் எத்தனை பேர் இந்நாட்டில் தண்டிக்கப்பட்டார்கள்?

குடும்பம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பாடுபடும் பொறுப்புணர்வு கொண்டவனாக, துணிச்சலும், துடிப்பும் மிக்கவனாக ஆண் மதிக்கப்படும் வேளையில், பெண்கள், துயரத்தில் உழலும் அபலைகளாகவும், எதையும் தாங்கும் இதயம் படைத்த பொறுமைசாலிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றார்கள். கல்வி மற்றும் சமூகரீதியான துறைகளில் பெண்கள் இன்று மகத்தான முன்னேற்றத்தை பெற்றிருக்கலாம். ஆனால், அவர்களில் பலரும் தங்களது வீடுகளில் நிம்மதியை இழந்தே காணப்படுகின்றனர்.

உள்ளாட்சி அதிகாரங்கள், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது மூலமாக மட்டுமே பெண்களின் பாதுகாப்பையோ முன்னேற்றத்தையோ உறுதிசெய்ய இயலாது. குடும்பம் முதல் சமூக வரை பரவியுள்ள பெண்ணை குறித்த சிந்தனைகள் மாற்றப்பட வேண்டும். முறையான சுதந்திரமும், பாதுகாப்பும், கண்ணியமும் வழங்கப்பட்டு தனக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை புரிந்துக்கொண்டு அதனை சரியான வழியில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை பெண்களுக்கு உருவாக்கி கொடுக்கவேண்டும். பெண்கள் சுயமாக பலம்பெற்று அதற்கு தேவையான பின்புலமாக ஆண்கள் மாறி ஒரு கூட்டான முயற்சியின் வாயிலாகத்தான் பெண்களின் பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் உறுதிச்செய்ய இயலும்.

Tags : sky ,Women's Day , Women's Day
× RELATED மனவெளிப் பயணம்