×

திருப்பத்தூர் மாவட்டத்தில் அப்துல்கலாமின் கனவு ஆண்டில் 2020 நிமிடத்தில் 2020 கவிதைகள் எழுதி இளைஞர் சாதனை

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜடையனூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரின் மகன் சு.கதிர்வேல். பி.எஸ்.சி.நர்சிங் படித்துள்ளார். இவர் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் கனவு ஆண்டான 2020ல் உலக சாதனைப் படைக்க வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார். இவர் ‘அப்துல் கலாம் வேல்டு ரெக்கார்ட் ரிசர்ச் பவுண்டேஷன்’ என்ற நிறுவனம் கடந்த மாதம் 21ம் தேதி நடத்திய கவிதைப் போட்டியில் பங்கேற்றார். மீனம்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர்கள்  தலைப்புகளை தேர்ந்தெடுத்துக்கொடுத்தனர்.

அதன்படி ஆழி, அரசாங்கம் உள்ளிட்ட வித்தியாசமாக வழங்கப்பட்ட தலைப்பிற்கேற்ப, உடனுக்குடன் கவிதைகளை எழுதினார். மொத்தம் 2020 தலைப்புகளுக்கானக் கவிதைகளை, 2020 நிமிடங்களில் எழுதி இளைஞர் கதிர்வேல் சாதனை படைத்தார். இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள கதிர்வேல், இதற்கு முன்பு பல கவிதைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இது மட்டுமல்லாமல் சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மருத்துவம், மகத்துவம் என்ற குறும் படத்திற்காக மாநில அளவில் முதல் பரிசு வென்றுள்ளார்.

மாநில அளவிலான நடனப் போட்டிகளிலும் பங்கேற்று பரிசு பெற்றுள்ளார். மேலும் தொலைக்காட்சித் தொடரில் சிறிது காலம் துணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். மேலும் எம்.ஜி.ஆர் பாண்டியன், தப்பாட்டம், பில்லா பாண்டி உள்ளிட்ட படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். துணை நடிகராக சில படங்கள் மற்றும் நாடகங்களிலும் நடித்துள்ள இவர் 2 பாடல் ஆல்பங்களை இயக்கி நடித்துள்ளார். சாதனை இளைஞர் கதிர்வேல், கூறுகையில் “தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ மூலம் சினிமாத்துறையில் நுழைந்தேன். நிறைய மொழிகளில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டிருந்தாலும், தமிழில் குழுவாக இணைந்து கவிதை எழுதும் சாதனை மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதால், தனிநபர் சாதனையை நிகழ்த்த எண்ணி இந்த முயற்சியை மேற்கொண்டேன்.

இதனால் வித்தியாசமான தலைப்புகளில் 2020 கவிதைகளை, 2020 நிமிடங்களில் எழுதும் இந்தச் சாதனையை மேற்கொண்டு வெற்றி பெற்றேன். இந்த வாய்ப்பை வழங்கிய அப்துல் கலாம் வேல்டு ரெக்கார்ட் ரிசர்ச் பவுண்டேஷன் மேலாளர் செல்வி நந்தினி அவர்களுக்கும், என்னை ஊக்கப்படுத்தியச் சென்னை விமான நிலைய உதவி மேலாளர் விவேக் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் முதன்முறையாக இதுபோன்ற புதிய உலக சாதனையை நிகழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்த சாதனைக்குப் பின்னணியாக இருந்த மீனம்பாக்கம் ஆதி திராவிடர் நலப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஆனந்தி, கூறுகையில் “கதிர்வேல் நிகழ்த்தியுள்ள இந்தச் சாதனைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தலைப்புகளை எங்கள் பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுக்க அளிக்கப்பட்ட வாய்ப்பின் மூலம், எங்களது பள்ளி மாணவர்களின் அறிவுத்திறன் மட்டுமல்லாமல், அவர்களின் உத்வேகம் மற்றும் கற்பனைத்திறனைப் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த வாய்ப்பளித்த நிறுவனத்திற்கு நன்றி’ என்றார்.

Tags : Abdulkalam ,district ,Tirupattur , Tiruppattur
× RELATED திருப்பத்தூர் மாவட்ட வனப்பகுதியில்...