×

லஞ்ச குற்றச்சாட்டில் இருந்து ராகேஷ் அஸ்தானா விடுவிப்பு: குற்றப்பத்திரிக்கையை ஏற்றது நீதிமன்றம்

புதுடெல்லி: லஞ்ச குற்றச்சாட்டில் இருந்து சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ டிஎஸ்பி தேவேந்தி குமார் ஆகியோர் விடுவிக்கப்பட்டது தொடர்பான குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக் கொண்ட டெல்லி சிறப்பு நீதிமன்றம், மற்ற குற்றவாளிகள் அடுத்த மாதம் ஆஜராக சம்மன் பிறப்பித்தது. ஐதராபாத்தை சேர்ந்த ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான ஊழல் வழக்கில் இருந்து, தன்னை விடுவிப்பதற்காக, சிபிஐ சிறப்பு இயக்குனராக இருந்தா ராகேஷ்  அஸ்தானா ரூ.3 கோடி லஞ்சம் பெற்றதாக சதீஷ் சானா என்பவர் குற்றம்சாட்டினார். இந்த வழக்கை கடந்த 2 ஆண்டுகளாக சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் ராகேஷ் அஸ்தானா மற்றும் கடந்த 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சிபிஐ டிஎஸ்பி தேவேந்திர குமார் ஆகியோர் மீதான லஞ்ச புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த 11ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிக்கையை டெல்லி நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டது. இதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால் கூறுகையில், ‘‘இந்த வழக்கில் ராகேஷ் அஸ்தானா மற்றும் டிஎஸ்பி தேவேந்திர குமார் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இடைத்தரகர் மனோஜ் பிரசாத், அவரது சகோதாரர் சோமேஸ்வர் வஸ்தவா, மாமனார் சுனில் மிட்டல் ஆகியோருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன. இவர்கள் அடுத்த மாதம் 13ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் விசாரணையில் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக ஏதாவது ஆதாரங்கள் இருந்தால், சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யலாம்’’ என்றார்.

Tags : Rakesh Asthana , Bribery, Rakesh Astana, indictment, court
× RELATED சிபிஐ முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா மீது ஒழுங்கு நடவடிக்கை