×

ஆட்சி கவிழ்ப்பு சதி செய்ததாக சவுதியில் 3 இளவரசர்கள் கைது

ரியாத்: ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக சவுதி அரேபிய மன்னர் சல்மானின் சகோதரர் உட்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 3 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சவுதி அரேபியாவில் மன்னராக சல்மானும்(84), பட்டத்து இளவரசராக அவரது மகன் முகமது பின் சல்மானும் உள்ளனர். இந்நிலையில், மன்னர் சல்மானின் இளைய சகோதரரும், இளவரசருமான அகமது பின் அப்துலாசிஸ் அல்-சவுத், முன்னாள் பட்டத்து இளவரசரும். உள்துறை அமைச்சருமாக இருந்த முகமது பின் நயீப், இவரது சகோதரர் நவாப் பின் நயீப் ஆகியோர் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டது கண்டறிப்பட்டது.  சவுதி மன்னரையும், பட்டத்து இளவரசரையும் பதவியில் இருந்து நீக்கும் முயற்சியில் இவர்கள் 3 பேரும் இறங்கியதாக கூறப்படுகிறது. அதனால் இவர்களை  சவுதி அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்ததாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதால் இவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டை சவுதி அரசவை நீதிமன்றம் சுமத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு வாழ்நாள் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது. சவுதி மன்னரின் சகோதரர் இளவரசர் அகமது(70) லண்டனில் வசித்து வந்தார். ஏமன் விவகாரத்தில் சவுதி தலையீட்டுக்கு எதிராக லண்டனில் போராட்டம் நடத்த இவர் ஏற்பாடு செய்தார். மன்னர் சல்மான், இளவரது முகமது பின் சல்மான் ஆகியோர்தான் ஏமன் தலையீட்டுக்கு காரணம் என வெளிப்படையாக விமர்சித்தார். பத்திரிக்கையாளர் கசோகி படுகொலைக்குப்பின் இவர் மீண்டும் சவுதி திரும்பி, தான் மன்னராவதற்கு ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.  சவுதியில் அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கைது செய்துவிடுவார்.

இவர் கடந்த 2017ம் ஆண்டு சவுதி இளவரசர்கள், மத குருக்கள், அமைச்சர்கள் மற்றும் தொழில் அதிபர்களை, சொகுசு விடுதியில் அடைக்க உத்தரவிட்டிருந்தார்.  தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிவந்த அமெரிக்க இதழின் பத்திரிக்கையாளர் ஜமால் கசோகியையும், துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கடந்த 2018ம் ஆண்டு கொலை செய்யவும் உத்தரவிட்டார்.  இதனால் இவர் சர்வதேச நாடுகளின் கண்டனத்துக்கும் ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சவுதி இளவரசர்கள் 3 பேர் கைது மூலம், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீண்டும், தனது அதிகாரத்தை காட்டியுள்ளார்.

Tags : Saudi ,coup , Coup, Saudi, 3 princes, arrested
× RELATED துபாயைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை!