×

தஞ்சாவூர் ஜெயின் கோயிலில் திருட்டு போன ஐம்பொன் சிலை உள்பட 22 சிலைகள் மீட்பு

தஞ்சை: தஞ்சாவூரில் 600 ஆண்டு பழமையான ஜெயின் கோயிலில் திருடுபோன ஐம்பொன் சிலை உள்பட 22  சிலைகளை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  தஞ்சாவூர் கரந்தை ஜைன முதலி தெருவில், 600 ஆண்டுகள் பழமையான ஆதீஸ்வரர் என்ற ஜெயின் கோயில் உள்ளது. இக்கோயிலில், கடந்த 19ம் தேதி தலா ஒன்றரையடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன ஆதீஸ்வரர் சிலை, 24வது தீர்த்தங்கர் சிலை, சரஸ்வதி சிலை, ஜோலமாலினி சிலை, சரவண யாக்சன் சிலை, தலா ஒரு அடி உயரமுள்ள பஞ்சமேரு சிலை, மகாவீர் சிலை, தலா அரையடி உயரமுள்ள தார்நேத யாஸ்கன் சிலை, பத்மாவதி யாஷினி சிலை, நந்தீஸ்வரர் சிலை, தலா முக்கால் அடி உயரமுள்ள சாவண யாக்‌ஷி, நவகிரக தீர்த்தங்கள், நவதேவதை சிலை உட்பட 22 சிலைகள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து கோயிலின் டிரஸ்டி  கொடுத்த புகாரின்பேரில் மேற்கு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், தஞ்சை சுங்கான் திடலை சேர்ந்த ராஜேஷ் (40), என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரது தகவலின்பேரில், சண்முகராஜன் (45), சுங்கான் திடலை சேர்ந்த ரவி(45), நாகப்பட்டினம் மாவட்டம் கீவலூரை சேர்ந்த விஜயகோபால்(37) ஆகிய மூவரையும் கைது செய்தனர். திருடிய சிலைகள் கோடிக்கணக்கில் விலை போகும் என்பதால், விற்பனை செய்வதற்காக ராஜேஷ் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தார். இதையடுத்து அங்கிருந்த 22 சிலைகளையும் நேற்று மீட்டு  4 பேரையும் போலீ சார் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளிகள் சிக்கினர்
சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று முதுகுளத்தூர் வந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பஸ் ஸ்டாண்ட் பகுதியில், முதுகுளத்தூர், கிழக்குத்தெருவை சேர்ந்த இளமாறன், வீரம்பலை சேர்ந்த இருதயராஜ், தத்தங்குடி ஜெயபாலன், கடலாடியை சேர்ந்த காளிதாஸ், சாந்தகுமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து 22 செ.மீ உயரம் கொண்ட ஸ்கந்தர் உலோக சிலையை பறிமுதல் செய்தனர். இவர்கள் தமிழகத்தில் நடந்த சிலை திருட்டுகளில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளிகள் என கூறப்படுகிறது. பின்னர் 5 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Thanjavur Jain Temple, Theft and Idol Statue
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை