×

வி.கே.புரம் பகுதியில் தொடர் அட்டகாசம்: மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது

வி.கே.புரம்: வி.கே.புரம் பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.  நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தை ஒட்டியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையடிவார கிராமங்களுக்கு சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி படையெடுக்க துவங்கியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு வி.கே.புரம், டாணா, அனவன்குடியிருப்பு பகுதியில் யானைகள் புகுந்து தென்னை மரங்களை துவம்சம் செய்தன. கடந்த 26ம் தேதி திருப்பதியாபுரம், இந்திராநகர் காலனியில் 3 பேரது வீடுகளில் கட்டிப் போடப்பட்டிருந்த நாய்களை சிறுத்தை தூக்கி சென்றது. இதேபோல் மணிமுத்தாறு வேம்பையாபுரம் மலையடிவாரத்தில் பிப்.29ம் தேதி அதிகாலை சுற்றித்திரிந்த சிறுத்தை, ஆடு மற்றும் 2 குட்டிகளை கடித்து குதறியது.

அன்று மதியம் வேம்பையாபுரத்தில் ஒரு ஆட்டை சிறுத்தை கடித்து தூக்கிச் சென்றது. இதையடுத்து வனவர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையின் கால் தடங்களை பதிவு செய்தனர். வேம்பையாபுரத்தில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து அதில் நாயை கட்டிப் போட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த கூண்டில் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை சிக்கியது. வனத்துறையினர் சென்று பார்த்தபோது, கூண்டின் கம்பியை வளைத்து சிறுத்தை வெளியேற முயன்றது.  சுதாரித்துக் கொண்ட வனத்துறையினர் கூண்டு கம்பிகளின் மேல்பாகத்தை இறுக கட்டி உடனடியாக வேனில் ஏற்றி முண்டந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட பாபநாசம் அணையின் மேல்பகுதியில் 15 கிமீ தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட்டனர்.

Tags : attacks ,area ,VK Puram , Vk puram, leopard
× RELATED தாவரவியல் பூங்காவில் காயத்துடன்...