×

தமிழகத்தில் கூடுதலான இடங்களில் காற்றாலை மின்உற்பத்தி நிலையங்கள் அமைப்பு: தமிழக மின்சார வாரியம் திட்டம்

சென்னை: தமிழகத்தில் கூடுதலான இடங்களில் காற்றாலை மின்உற்பத்தி நிலையங்களை அமைக்க தமிழக மின்சாரவாரியம் திட்டமிட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் வீடு மின்இணைப்புகள்- 2 கோடி, வணிகம் 35 லட்சம், தொழிற்சாலைகள்- 7 லட்சம், விவசாயம்- 21 லட்சம், குடிசைகள்- 11 லட்சம் என மொத்தம் 2.90 கோடிக்கும் மேலான இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கு தேவையான மின்சாரத்தை தயாரிப்பதற்காக அனல்மின்நிலையங்கள் 4,300 மெகாவாட், நீர்-2,300; காற்றாலை-8,500; சூரியசக்தி - 3759 மெகாவாட் அளவிற்கு மேல் நிறுவப்பட்டுள்ளன.  இதுதவிர மத்திய ெதாகுதிப்பில் இருந்தும் மின்சாரம் தேவைப்படும் போது பெற்றுக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய மின்சார ஆணையம் நாடுமுழுவதும் 2022ல் மூட வேண்டிய அனல் மின்நிலையங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது. இதில் நாடுமுழுவதும் பல்வேறு அனல் மின்நிலையங்கள் இடம்பெற்றன.

அந்தவகையில் தமிழகத்தில் 25 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வரும் தூத்துக்குடி 1,050 மெகாவாட், மேட்டூர் 840 மெகாவாட், வடசென்னை 630 மெகாவாட் திறன் கொண்ட மூன்று அனல்மின்நிலையங்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றை மூடிவிட்டால் மீதம் உள்ள அனல்மின்நிலையங்களை கொண்டு மட்டும் மின்உற்பத்தியை முழுவதுமாக பூர்த்தி செய்து விட முடியாது. இதைக்கருத்தில்கொண்டு முன்னதாக திட்டமிடப்பட்டு நடந்து வரும் எண்ணூர்-1,320 மெகாவாட், எண்ணூர் விரிவாக்கம்-660 மெகாவாட், வடசென்னை மூன்று-800 மெகாவாட், உடன்குடி-1320, உப்பூர்-1,600 மெகாவாட்டில் அனல்மின்நிலையம் அமைப்பது உள்ளிட்ட திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதற்கு மின்வாரியம் முயற்சித்து வருகிறது.

இதேபோல் மற்றொருபுறம் சுற்றுச்சூழல் நலனை கருத்தில்கொண்டு பசுமை எரிசக்தியை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. அதன்படி காற்றாலை மின்உற்பத்தியை தற்போதுள்ளதை விட கூடுதலா 400 மெகாவாட்டிற்கு மேல் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கு தமிழகத்தில் 8,500 மெகாவாட்டிற்கும் மேல் காற்றாலை மின்உற்பத்தி நிலையங்கள் இருந்தபோதும், அதில் 70-75 சதவீதம் அளவிற்கான நிலையங்கள் மட்டுமே இயங்குகிறது. 1 மெகாவாட் திறனுக்கு குறைந்த காற்றாலைகள் செயலற்ற நிலையிலேயே காணப்படுகின்றன. இதன்காரணமாகவே கூடுதலாக காற்றாலை மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பசுமை எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் தமிழக மின்சாரவாரியம் முக்கியத்துவம் காட்டி வருகிறது. இந்தியாவில் காற்றாலை மொத்த மின் உற்பத்தி திறனான 37,608 மெகாவாட் திறனில் தமிழகத்தின் பங்கு 23 சதவீதமாக இருக்கிறது.  காற்றாலை மின்உற்பத்தி உச்ச அளவாக 5096 மெகாவாட் அளவை சமீபத்தில் எட்டியது குறிப்பிடத்தக்கது. இதை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிதாக 400 மெகாவாட் அளவிற்கு மேல் காற்றாலை மின்உற்பத்தி நிலையங்கள் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் சூரிய மின்சக்தியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Tamil Nadu ,Wind Power Generating Stations ,Tamil Nadu Electricity Board , Tamil Nadu, wind power stations, Tamil Nadu Electricity Board
× RELATED அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில்...