×

3 கட்டமாக நடக்கிறது ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு

திருமலை: ஆந்திர மாநிலத்தில் 3 கட்டமாக நடக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஜில்லா பரிஷத், மண்டல பரிஷத் பதவிக்கான தேர்தல் மார்ச் 21ம் தேதியும் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் மார்ச் 23ம் தேதியும்  பஞ்சாயத்து தேர்தல் 2 கட்டமாக நடைபெறும். முதல் கட்டத் தேர்தல் மார்ச் 27ம் தேதியும் 2ம் கட்டத் தேர்தல் 29ம் தேதியும் நடைபெறும். தேர்தல் குறித்து ஆந்திர மாநில தேர்தல் ஆணையாளர் ரமேஷ்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்படி முதல்கட்டமாக ஜில்லா பரிஷத் மற்றும் மண்டல பரிஷத் பதவிக்கான தேர்தல் வரும் 21ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 24ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

2வது கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதையடுத்து 27ம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் 2 கட்டமாக நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக இந்த மாதம் 27ம் தேதி காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை வாக்குப்பதிவு, அன்றைய தினமே மதியம் 2 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.  2வது கட்டமாக பஞ்சாயத்து தேர்தல் இந்த மாதம் 29ம் தேதி காலை 7 மணி முதல் 1 மணி வரையில் வாக்குப்பதிவும், அன்றைய தினமே மதியம் 2 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கையுடன் தேர்தல் நிறைவு பெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

பணம், பரிசு  கொடுப்பதை கண்காணிக்க மொபைல் ஆப்
உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு கட்சியினர் பணம், பரிசுப்பொருள் மற்றும் மது வழங்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை கண்காணித்து புகார் அளிப்பதற்காக `நிகா’’ என்னும் மொபைல் செயலியை போலீசார் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து தயார் செய்துள்ளனர். குண்டூர் மாவட்டம், தாடேபல்லியில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன்மோகன் நிகா மொபைல் ஆப்பை நேற்று வெளியிட்டார்.



Tags : elections ,Andhra Pradesh , Local elections , Andhra Pradesh
× RELATED கேரளா, கர்நாடக மாநிலங்களில் மக்களவை...