×

துணி துவைக்க சென்றபோது ஏரியில் மூழ்கி சிறுமிகள் உள்பட 3 பேர் பலி: செங்கல்பட்டு அருகே சோகம்

சென்னை: செங்கல்பட்டு அருகே ஏரியில் துணி துவைக்க சென்றபோது இளம்பெண் மற்றும் 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் வைகுந்த நகரை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மனைவி ராஜேஸ்வரி (27). இவர்களது மகள் சுபாஷினி (10). மகேஷ்குமாரின் தம்பி சதீஷ். இவரது மகள் தேவதர்ஷினி (6). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சுபாஷினி மற்றும் தேவதர்ஷினி முறையே 2 மற்றும் 6 வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை ராஜேஸ்வரி, பொன்விளைந்த களத்தூர் ஏரியில் துணி துவைக்க புறப்பட்டார். அவருடன் சிறுமிகள் சுபாஷினி, தேவதர்ஷினி ஆகியோரும் சென்றனர். ஏரியில் ராஜேஸ்வரி துணி துவைத்து கொண்டிருந்தார். சிறுமிகள் அங்குள்ள பாறை மீது உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென சிறுமி தேவதர்ஷினி பாறையில் இருந்து வழுக்கி தண்ணீரில் விழுந்தாள். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி, உயிருக்கு போராடினாள். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி, சிறுமியை மீட்க தண்ணீரில் இறங்கியபோது, அப்பகுதி ஆழமாக இருந்ததால், அவரும் தண்ணீரில் மூழ்கினார். தாய் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடுவதை பார்த்த அவரது மகள் சுபாஷினி, அலறி கூச்சலிட்டாள். ஆனால், அந்த நேரத்தில் அப்பகுதியில் யாரும் இல்லை.  இதனால், தாய் மற்றும் உறவினரின் மகளை மீட்க சுபாஷினியும் தண்ணீரில் இறங்கினாள். சிறிது நேரத்தில் மூவரும் நீரில் மூழ்கினர்.  இதனிடையே, துணி துவைக்க ஏரிக்கு சென்ற 3 பேரும், நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினர்கள், ஏரிக்கு சென்று பார்த்தனர். அங்கு, துவைக்க எடுத்து வரப்பட்ட துணிகள் மட்டும் கரைப்பகுதியில் இருந்தன. 3 பேரையும் காணவில்லை. இதனால், உறவினர்கள் அக்கம் பக்கத்தில் விரைந்து தேடினர். அப்போது, சிறிது தூரத்தில் 2 சிறுமிகள் ஏரியில் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக சிறுமிகளின் சடலங்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், ராஜேஸ்வரியை தேடியபோது கிடைக்கவில்லை. தகவலறிந்து செங்கல்பட்டு டிஸ்பி கந்தன், செங்கல்பட்டு தாலுகா எஸ்ஐ மணிகண்டன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, ஏரியில் இறங்கி தேடி சேற்றில் சிக்கிய ராஜேஸ்வரியை, சடலமாக மீட்டனர்.  பின்னர், 3 சடலங்களையும் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர். இளம்பெண் மற்றும் 2 சிறுமிகள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் பொன்விளைந்த களத்தூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பலியான ராஜேஸ்வரியின் கணவர் மகேஷ்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tragedy ,Chengalpattu ,lake , Little girls drowned in lake, 3 killed, Chengalpattu
× RELATED திருக்கழுக்குன்றம் அருகே சோகம்: தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை