×

கோவையில் 40 தெருநாய்களை குழந்தைபோல் பராமரிக்கும் பெண்

கோவை: கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ஷீலா. டெய்லர். இவரின் கணவர் ராஜேஷ். இரண்டு மகன்கள் உள்ளனர். ஷீலாவுக்கு நாய்கள் மீது பாசம் அதிகம். இவர் கடந்த 8 வருடமாக சாலை விபத்தில் சிக்கும் நாய்கள், நோய் வாய்ப்பட்ட தெரு நாய்கள், வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்படும் நாய்களை  குழந்தைபோல் பேணி காத்து வருகிறார். இதுகுறித்து ஷீலா கூறியதாவது: சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள குந்தா. பல வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்து விட்டோம். அப்போது நான் டெய்லராக பணியாற்றி வந்தேன். அங்கு ராமு என்ற தெரு நாயை அருகில் உள்ள கம்பெனியில் வளர்த்து வந்தனர். பின்னர், அதனை அவர்கள் அடித்து துரத்திவிட்டனர். ராமு செல்ல இடம் இல்லாமல் அப்பகுதியில் சில வீடுகளில் தஞ்சம் அடைந்தது. ஒரு நாள் நான் பணி செய்யும் கம்பெனிக்கு ராமு வந்தது. அன்று முதல் ராமுவை நான் வளர்க்க ஆரம்பித்துவிட்டேன். என்னுடன்தான் இருக்கும். நான் பஸ் ஏற சென்றால் கூட வழியனுப்ப ராமு பஸ் நிலையம் வரை வரும். ஒரு நாள் என்னை பஸ் ஏற்றிவிட்டு சென்ற ராமு வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் நாங்கள் தேடியும் பயனில்லை.

மூன்று நாட்களுக்கு பின் பஸ்சில் அடிபட்டு ராமு இறந்ததாக செய்தி வந்தது. சாகும்போதும் ராமு என்னை தனியாக விட்டுவிடவில்லை. ஒரு குட்டியை எங்கள் கம்பெனியில் விட்டு சென்றது. அன்று முதல் நான் எங்கு சென்றாலும் நாய்கள் என்னிடம் அதிகம் அன்பு காட்டின. இதனால், நானும் தெருநாய்கள் மீது அன்பு செலுத்தினேன். இதன் விளைவு தற்போது என்னிடம் 10 குட்டி உள்பட 40 நாய்கள் உள்ளன. இவை பலரது வீட்டில் வளர்க்கப்பட்டு தூரத்தியடிக்கபட்டவை. சில நோய்வாய்ப்பட்டவை. இதற்கு தகுந்த சிகிச்சை அளித்து தடுப்பூசிகள் அனைத்தும் போடப்பட்டு வளர்த்து வருகிறேன். அனைத்து நாய்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மாதம் 300 கிலோ அரிசி தேவைப்படுகிறது. பல பாக்கெட் பிஸ்கட், தினமும் ரூ.100க்கு சிக்கன் வாங்கி கொடுக்கிறேன்.

பழைய இடத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்ட நிலையில், தற்போது முல்லைநகர் சிறுவாணி ரோட்டில் உள்ள கண்ணப்பநகர் பகுதிக்கு மாறியுள்ளோம். இங்கு தனி ஷெட் அமைத்து தினமும் காலை முதல் மாலை வரை நான் பார்த்துக்கொள்கிறேன். என் நண்பர்கள் பலர் எனக்கு நாய்களை பராமரிக்க உதவி செய்து வருகின்றனர். குட்டிகளை வீட்டில் வைத்துள்ளேன். நோய்கள் குணமான பின்பு நாய்களை கேட்பவர்களுக்கு தானமாக அளித்து வருகிறேன். என் வாழ்நாளை இவர்களுடன் செலவிடவே அதிகம் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Kovil , Koi, street dog, baby, caring, woman
× RELATED மதுரை பெத்தானியாபுரம் அருகே சாக்கடையில் பெண் சிசு சடலமாக மீட்பு..!!