×

பார்மலின் கலந்து தமிழகமெங்கும் விற்பனை கதையை முடிக்கும் கடல் மீன்கள்: அதிர்ச்சியில் அசைவ பிரியர்கள்

மதுரை: ‘‘என்னப்பா... மீன் மார்க்கெட்டுல நிற்கிறே...’’ என்று நண்பர் கேட்க, ‘‘அட, அதை ஏம்பா கேட்கிறே... கொலஸ்ட்ரால் கூடிப்போச்சு... டாக்டர் மீன் சாப்பிட சொன்னாரு... அதான் மீன்ல இறங்கிட்டேன்...’’ - இந்த டயலாக்குளை கடந்த சில ஆண்டுகளாக நம்மை சுற்றி உள்ள பலர் பேச அடிக்கடி கேட்டிருப்போம். உடலுக்கு உபாதை தராத மீன்களை, ருசிப்பவர்கள் கணிசமாக உயர்ந்திருக்கும் இந்த நேரத்தில், ரசாயனம் கலந்து தமிழக மார்க்கெட்களில் விற்கப்படும் மீன்களால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை அசைவ உணவை சாப்பிடுபவர்களின் விருப்பமே தனிதான். மாவட்டத்திற்கு ஏற்ப அசைவ விருப்பம் மாறுபடுகிறது. ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன், நண்டு, இறால் என ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமானதை தேர்ந்தெடுத்து ருசித்து வருகின்றனர். பெரும்பாலும், கடல் வாழ் மீன்கள் உடலுக்கு பல நன்மைகள் தருகின்றன. நன்மையை பார்த்து விட்டு தீமைப்பகுதிக்கு செல்வோமா?

மீனில் வைட்டமின் ‘டி’,  புரோட்டின் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதயத்துடிப்பை சீராக்கும் தன்மையுடையது. உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும். கண்களுக்கு நல்லது. மனஅழுத்தத்தை குறைக்கும். பால் சுறா உள்ளிட்ட மீன்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்தது. இதில் இருக்கும் `டிஹெச்ஏ’ எனும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நன்மை தரக்கூடியது. தூக்கமின்மை ஏற்படாது. கெட்டக் கொழுப்பை அண்ட விடாது இப்படி பலவிதமான நன்மைகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மீன் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆனால் மீன் விரும்பிகளை, அச்சத்திற்குள் மூழ்கடித்து, மூச்சு முட்ட வைக்கும் விதமாக மதுரையின் முதன்மை மீன் சந்தை என்ற பெருமைக்குரிய கரிமேடு மீன் மார்க்கெட்டில் சமீபத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, அந்த மீன்களில் ‘புற்றுநோயை’ உண்டாக்கும் ‘பார்மலின்’ என்ற ரசாயனம் தடவப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். சுமார் 2 ஆயிரம் கிலோ ரசாயன மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சாதாரணமாக, 1 கிலோ மீனை 4, 5 பேர் வரை சாப்பிடலாம். இந்த கணக்குப்படி பார்த்தால், 2 ஆயிரம் கிலோ ரசாயன மீன்களை விற்பனை செய்து, அதை சாப்பிடும் சுமார் 8 ஆயிரம் பேரின் கதி என்ன என்று யோசித்து பார்க்கவே முடியவில்லை. மதுரை மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்கப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது. இந்த சோதனை மாநிலம் முழுவதும் அதிர்வைக் கொடுத்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்களிலும் இந்த சோதனையை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இந்த பார்மலினானது மனித சடலங்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் ரசாயனம் ஆகும். பிணத்திற்கு போடும் ரசாயனத்தை, வருவாய் கருதி சிலர், மீன்களுக்கு போட்டு பணம் பார்க்கும் வேலையில் இறங்கி இருப்பது கொடுமையானது. இதுகுறித்து மதுரை உணவு பாதுகாப்பு அதிகாரி சோமசுந்தரம் கூறுகையில், ‘‘நான் உள்ளிட்ட 20 பேர் 8 ஆய்வக ஊழியர்களுடன், தகுந்த உபகரணங்களுடன் கரிமேடு மீன் மார்க்கெட் கடைகளில் சோதனையில் ஈடுபட்டோம்.

மீன்கள், நண்டு, இறால் என 2 டன் அளவிற்கு ‘பார்மலின்’ ரசாயனக் கலப்பைத் தெரிந்து, பறிமுதல் செய்து அழித்தோம். பார்மலின் கலந்த தண்ணீரில் கழுவி எடுத்து, பதப்படுத்துவதற்கான ஐஸ் கரையாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் உப்பில் இந்த பார்மலினை கலந்து, ஐஸ் மெல்ல உருக உருக, அதில் உள்ள பார்மலின் ரசாயனம் மீன்களுடன் சேர்ந்து கெடாமல் இருக்கும் வகையிலும் செய்துள்ளனர். இவ்வகை மீன்கள் குறைந்தது 15 நாட்கள் வரை அழுகி கெட்டு விடாமல், பிரஷ்ஷாக இருக்கும். பெரிதாக மருந்து வாடை தெரியாது. உண்பவர்களுக்கு ஒவ்வாமை, வாந்தி, தலைவலி, ‘மைன்ட் பாக்’ எனும் மந்த நிலையில் துவங்கி, கிட்னி பாதிப்பை, புற்றுநோயை தந்து விடும். வெளிமாநிலங்களில் இருந்து வரும் மீன்களிலேயே இவ்வகை பார்மலின் தடவி வருவதாக தெரிவித்தனர். ஒவ்வொரு கடைக்காரருக்கும் எச்சரிக்கை செய்யப்பட்டு, இனியும் இது தொடர்ந்தால் கடைகளுக்கு ‘சீல்’ வைப்பதாகவும், அபராதம், குற்றநடவடிக்கைகள் குறித்தும் எச்சரித்துள்ளோம். தொடர் திடீர் சோதனைகளை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

மதுரை மீன் வியாபாரிகள் கூறும்போது, ‘‘ராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதிகளில் இருந்து வரும் மீன்களில் இந்த வகை பார்மலின் ரசாயனம் இருப்பதில்லை. மதுரைக்கு கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பிடித்து பல நாட்கள் பாதுகாக்கப்பட்டதாக வரும் மீன்களில்தான் இருக்கின்றன. இதுபோன்ற மீன்களை இனி அனுப்பி வைக்க வேண்டாம் என்று கூறி விட்டோம். முன்பு தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு சென்ற மீன்களில் இந்த ரசாயனம் இருந்ததாக புகார் எழுந்தது. தற்போது அங்கிருந்து வரும் மீன்களில் இருப்பதும் தெரிகிறது. மொத்தத்தில் இந்த ரசாயனக் கலப்பை முழுமையாக தடுத்து, மக்களுக்கு நம்பிக்கையோடு வியாபாரம் செய்யும் நடவடிக்கையை மதுரை கரிமேடு வியாபாரிகள் சங்கத்தினர் இணைந்து மேற்கொள்ள இருக்கிறோம். இதன்பேரில் அதிகாரிகளுக்கும் உறுதி கொடுத்துள்ளோம்’’ என்றனர்.

பார்மலினை மீன்களுக்கு பயன்படுத்துவது ஏன்?

ஆழ்கடலில் மீன் பிடிப்பவர்கள் கரை திரும்ப ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஆகும். அப்போது அவர்களால் பிடிக்கப்படும் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலினை பயன்படுத்துகின்றனர். இதை பயன்படுத்துவதால் மீன்கள் அழுகாது. துர்நாற்றமும் வீசாது. அதிகபட்சமாக 15 நாள் வரை கெடாமல் இருக்கும். அதே நேரம் சமைக்கும்போது சில நேரங்களில் ஒருவித குளோரின் போன்ற வாடை அடிக்கும். அதிகளவு பார்மலின் சேர்க்கப்பட்ட மீன்களை சாப்பிட்டால், உடல் ஒவ்வாமை ஏற்படும். வயிற்றுப்போக்கு, வாந்தி,  தலைச்சுற்றல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

மேலும், கண்கள், தொண்டை, சிறுநீரக பாதிப்பு ஏற்படும். பொதுவாக, பார்மலினை மீன்களின் மேல் பகுதி முழுவதும் பூசுவது, பெரிய மீன்களுக்கு ஊசி மூலம் செலுத்துவது, உப்பில் கலந்து உள்ளே செலுத்துவது போன்ற நடைமுறைகள் கையாளப்படுகிறது. இந்த வகை மீன்கள் மொத்த வியாபாரிகளால் வாங்கப்பட்டு வெளியூர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும்போது பொதுமக்கள் இதனை வாங்கி செல்லும் நிலை உள்ளது. இந்த வகை மீன்கள் உள்ளூர் மார்க்கெட்டில் விற்கப்படுவதில்லை. பெரும்பாலும் கடல் இல்லாத பெருநகர சந்தைகளில் மட்டுமே இவ்வகை மீன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

பதமாக வேக வைத்து பாரின் ‘பறக்குது’ நண்டு

ஐஸ் கட்டிகள் போடப்படாமல் கடலில் இருந்து அதிகளவில் கொண்டு வரப்படும் மீன்கள், காய வைக்கப்பட்டு கருவாடுக்கு அல்லது மீன் அரவை நிறுவனங்களுக்கு சென்று விடும். நாட்டுப்படகு, விசைப்படகில் பிடித்து வரப்படும் மீன்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்படும். இறால், கனவாய் போன்ற மீன்கள் மொத்தமாக ஏற்றுமதி கம்பெனிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பதப்படுத்தப்படும். கடல் நண்டுகளை தரம் பிரித்து உடைத்து, அதன் சதைகளை மட்டும் நீராவி மூலம் அவித்து பேக் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.



Tags : Tamil Nadu ,The Marine Fishery , Formal, Tamil Nadu, Sales, Seafood
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...