×

வாகன விபத்துக்களை குறைக்கும் வகையில் சென்டர் மீடியன்களின் உயரம் அதிகரிப்பு: போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிரம்

சென்னை: தமிழகத்தில் நடந்து வரும் வாகன விபத்துக்களை குறைக்கும் வகையில், எந்த எந்த இடங்களில் ‘சென்டர் மீடியன்’களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்பது குறித்த விபரத்தை சேகரிக்கும் பணியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மாநிலம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி அனைத்து வகை வாகனங்களின் எண்ணிக்கை மொத்தம் 2 கோடியே 88 லட்சத்து 97 ஆயிரம். இவற்றை இயக்கும் வாகன ஓட்டிகள் பலர் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதன்காரணமாக விபத்துக்களில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக உயிரிழப்பு ஏற்பட்ட மாநிலமாக தமிழகம் இருந்தது. அப்போது மொத்தமாக 71,431 விபத்துக்கள் நடந்தன.

இதில் 17,218 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்ேபாது 2020ம் ஆண்டுக்குள் விபத்தை பாதியாக குறைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் விபத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதப்படுத்தினர். குறிப்பாக மதுபோதையில் வாகனங்களையும் இயக்குவோரை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டது. ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாமல் பயணிப்ேபார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில்  சாலைபாதுகாப்பு கூட்டமைப்புகளை உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக மாணவர்களிடத்தில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் கடைகளில் ஹெல்மெட் இலவசமாக வழங்குவதற்கும், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு வீடியோவை காட்டுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் வாகன விபத்துக்கள் குறைந்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டில் மொத்தம் 63,920 விபத்துக்கள் நடந்தது. இதில் 12,216 வாகன ஓட்டிகள் உயிரிழந்தனர். இதையடுத்து அதிக அளவில் சாலை விபத்துக்களை குறைத்த மாநிலம் என தமிழகத்தை தேர்வு செய்து, மத்திய அரசு விருது வழங்கியது. தொடர்ந்து 2019ம் ஆண்டில் 57,228 விபத்துக்கள் நடந்தது. இதில் 10,525 ஆக உயிரிழப்பு குறைந்தது. தொடர்ந்து சாலைவிபத்துக்களை குறைப்பதற்கு மேலும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் வேகமா வரும் வாகனம் சென்டர் மீடியனை உடைத்துக்கொண்டு எதிரில் வரும் வாகனத்தின் மீது மோதுகின்றன. அப்போது உயிரிழப்பு அதிக அளவில் நடப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவற்றின் உயரத்தை அதிகப்படுத்த போக்குவரத்துத்துறை திட்டமிட்டு, அதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 2.80 கோடிக்கும் மேலான வாகனங்கள் உள்ளன.

2 லட்சத்து 53 ஆயிரத்து 510 கி.மீ தூரத்திற்கு சாலைகள் உள்ளன. இவற்றில் அதிக அளவில் விபத்து நடக்கும் இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஆபத்தான வளைவு உள்ள இடங்களிலும், சிறுசாலைகள் சந்திக்கும் இடங்களிலும் அதிக விபத்து நடப்பது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து வாகனஓட்டிகள் முன்னதாகவே தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை, சிகப்பு விளக்கு போன்றவை வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்டர் மீடியன்களின் உயரம் குறைவாக இருப்பதும் உயிரிழப்பு அதிகமாக நடப்பதற்கு ஒருகாரணமாக இருக்கிறது. தற்போது 500மிமீ உயரம் சென்டர் மீடியன்கள் உள்ளன. இதில் அதிக விபத்து நடக்கும் பகுதிகளில் சென்டர் மீடியன்களின் உயரத்தை ஒன்றரை அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த, எந்த இடத்தில் உயர்த்தி அமைக்கலாம் என்பது குறித்த விபரத்தை சேகரித்து தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் சென்டர் மீடியன்களின் உயரம் உயர்த்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Tags : vehicle accidents ,traffic authorities ,Traffic Officers , Vehicle accident, traffic department, authorities
× RELATED கோவையில் 2 முறைக்கு மேல் வாகன...