×

தடையில்லா சான்று பெறாமல் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் 18 ஆயிரம் தொழிற்சாலைகள்: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: தடையில்லா சான்று பெறாமல் 18 ஆயிரம் தொழிற்சாலைகள் நிலத்தடி நீரை உறிஞ்சி வருவது தற்போது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் 471 பிர்காக்களை அபாயகரமான பகுதியாக அறிவித்து அங்கு நிலத்தடி நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில், தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 638 குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் சர்க்கரை ஆலை, சிமெண்ட் ஆலை, ஸ்டீல் தொழிற்சாலை, கெமிக்கல் தொழிற்சாலை என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய, சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தி வருகிறது. இந்த நிலத்தடி நீரை எடுக்க வேண்டுமென்றால் இந்த தொழிற்சாலைகள் பொதுப்பணித்துறையில் நிலத்தடி நீர் விவர ஆதார குறிப்பு மையத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

இதற்காக அந்த நிறுவனங்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொதுப்பணித்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த நிறுவனங்களுக்கு தினமும் எவ்வளவு நீர் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக பொதுப்பணித்துறை சார்பில் அளிக்கும் வரையறை அடிப்படையில் தான் நிலத்தடி நீர் எடுக்க வேண்டும். ஆனால், 18 ஆயிரம் தொழிற்சாலைகள் வரை தடையில்லா சான்று பெறப்படவில்லை. அந்த தொழிற்சாலைகள் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது குடிநீர் உற்பத்தி ஆலைகள் சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதாக ஆய்வு செய்து அந்த ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அதே போன்று சட்ட விரோதமாக தினமும் லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை எடுத்து உறிஞ்சி வரும் இந்த ெதாழிற்சாலைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘தமிழகத்தில் பெரிய, சிறு, குறு என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் 18 ஆயிரம் தொழிற்சாலைகள் மட்டுமே தடையில்லா சான்று பெறாமல் தண்ணீர் எடுத்து வருகின்றனர். இந்த தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசித்து வருகிறோம்’ என்றார்.

Tags : Factories ,Thousand Factories , Unstoppable proof, groundwater, factories
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...