×

வராக்கடன் வழங்கி திவாலான விவகாரம் யெஸ் வங்கி நிறுவனர் வீட்டில் ரெய்டு: மும்பையில் அமலாக்கத்துறை அதிரடி

மும்பை: வராக்கடன் வழங்கிய விவகாரத்தில் திவாலான யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் வீட்டில் அமலாக்கத்துறை விடியவிடிய சோதனை நடத்தியது. இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து நேற்று காலை அவரை அமலாக்கத்துறையினர் மும்பை அலுவலகத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் ‘யெஸ்’  வங்கியும் ஒன்று. இந்த வங்கி குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி அடைந்தது. இதனால் பங்குசந்தையில் இதன் மதிப்பு அதிகரித்தது. பொதுமக்களும், வர்த்தகர்களும் ஏராளமான பணத்தை வங்கியில் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக யெஸ் வங்கி ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அளவை விட கடன்களை வாரி வழங்கியது. குறிப்பாக கடன் கொடுத்தால் வராது என்று தெரிந்தும் கோடிக்கணக்கில் கடன்களை கொடுத்தது. நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்களுக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் கடன் கொடுத்தது. திவால் நிலையில் கம்பெனிகள் இருந்தாலும் அதையும் கண்டுகொள்ளாமல் கடன் வழங்கியது. இந்த மூன்று வகை கடன்களால் யெஸ் வங்கியின் வாராக்கடன் மதிப்பு பல லட்சங்களை கடந்தது. இதனால் யெஸ் வங்கிக்கு மூலதன நெருக்கடி ஏற்பட்டது. யெஸ் வங்கியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்த ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அடைந்தது.

உடனடி நடவடிக்கையாக அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் தான் எடுத்துக் கொண்டது. இதையடுத்து ரிசர்வ் வங்கி, யெஸ் வங்கிக்கு நிறுவனங்கள், தனி நபர்களுக்கு கடன்கள் வழங்குவதை  நிறுத்திவைக்க உத்தரவிட்டது. மேலும் வாடிக்கையாளர்கள் வங்கி  கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும், மறு  உத்தரவு வரும்வரை மேற்கண்ட கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டது. வங்கியின் நிர்வாகத்தை மறுசீரமைக்கவும் உத்தரவிட்டது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரத்தில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின்  மும்பையின் ஒர்லி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அதிரடி  சோதனை நடத்தினர். அங்கு பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவரிடம் விடியவிடிய விசாரணை நடந்தது. தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் அள்ளிச் ெசன்றனர். இந்நிலையில் நேற்று திடீரென அவர் தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் வங்கியில் சிக்கிய ஆவணங்கள் மற்றும் வீட்டில் நடந்த சோதனை மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கான கடனை வராக்கடனாக அறிவித்தது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

குறிப்பாக திவால் நிலையில் உள்ள கம்பெனிகளுக்கு எந்த அடிப்படையில் கடன் கொடுக்கப்பட்டது. கடன் கொடுத்தால் வராது என்று தெரிந்தும் எந்த விதமான உத்தரவாதமும் இல்லாமல் கடன் கொடுத்தது ஏன் என்பன உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்தனர். மேலும் பல்லாயிரம் கோடி கடனை வராக்கடன் பட்டியலில் சேர்த்தது ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்பட்ட நடவடிக்கையா என்றும் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரிடம் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரித்தனர். பல ேகள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. ஆதாரங்களை காட்டி விசாரித்தபோது அதற்கு மவுனமாக இருந்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும், ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ்  அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்கு பதிவும் செய்துள்ளது. விசாரணை முடியும்  வரை கபூருக்கு எதிராக அமலாக்கத்துறை ‘எல்ஓசி’ வெளியிட்டுள்ளது. இதனால்  அவர், நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. எல்ஓசி-யின் நகல் அவரது பாஸ்போர்ட்  விவரங்களுடன் விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘பண மோசடி தடுப்புச் சட்டத்தின்  ராணா கபூரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். வங்கி வழக்கு தொடர்பாக சில  இடங்களில் தேடல்கள் நடைபெறுகின்றன. இந்த நேரத்தில் எங்களால் மேலும்  விபரங்களை வெளியே சொல்ல முடியாது. 1 லட்சம் போலி கடன் வாங்குபவர்களைப்  பயன்படுத்தி 80 ஷெல் நிறுவனங்களுக்கு ரூ.12,733 கோடியை வழங்கியது ஆரம்பகட்ட  விசாரணையில் தெரியவருகிறது. இந்த பரிவர்த்தனைகள் 2015ம் ஆண்டிற்கு  முந்தையவை’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Founder ,Yes Bank ,Home Raid: Enforcement Department Action In Mumbai ,Mumbai , Warakadan, Yes Bank, Raid, Mumbai, Enforcement Department
× RELATED ரமலான் பண்டிகை கோலாகலம் ; இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை