×

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் நீண்ட தரை தளத்தின் தொடர்ச்சி கண்டுபிடிப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், கீழடியில் பிப்ரவரி 19ம் தேதி 6ம் கட்ட அகழாய்வு துவங்கியது. கடந்த 16 நாட்களாக நடந்த அகழாய்வில் இருவண்ண பானைகள், பானை ஓடுகள், பாசிகள் உள்ளிட்டவை மட்டும் கண்டறியப்பட்டன. 5ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் குழாயின் தொடர்ச்சியை கண்டறிவதற்காக, மீண்டும் கீழடியில் உள்ள நீதியம்மாள் நிலத்திலேயே அகழாய்வு நடந்தது. அங்கு 2 தொல்லியல் குழிகள் தோண்டப்பட்ட நிலையில், சுடுமண் குழாயின் தொடர்ச்சி கிடைக்கவில்லை. அதனையடுத்து சுடுமண் குழாய் கண்டறியப்பட்ட இடத்தின் மேற்கு பகுதியில் அகழாய்வு பணி கடந்த 2 நாட்களாக நடந்து வந்தது.

அப்போது 4 அடி ஆழத்தில் இரு அடுக்குகள் கொண்ட தரைத்தளம் நேற்று காலை தென்பட்டது. ஏற்கனவே கண்டறியப்பட்ட தரைத்தளத்திற்கு 10 அடி தூரத்திலேயே, இந்த தரைத்தளம் கண்டறியப்பட்டதால் அதன் தொடர்ச்சியாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். கடந்த ஆய்வில் கண்டறிந்த தரைதளம் போல இந்த தளமும் செங்கல் கட்டுமானத்திற்கு மேலே களிமண் பூச்சுடன் காணப்படுகிறது. தற்போது தரைத்தளம் 3 அடி நீளத்தில் உள்ளது. மேலும் அகழாய்வு நடைபெறும் போது முழுப்பகுதியும் கிடைக்க வாய்ப்புள்ளது. கீழடி அகழாய்வை காண வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று படமாத்தூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 40 பேரை, தலைமையாசிரியர் ஆனந்த் தலைமையிலான ஆசிரியர்கள் கள ஆய்விற்கு அழைத்து வந்திருந்தனர். அவர்களுக்கு தொல்லியல் அகழாய்வில் ஈடுபட்டுள்ள பொறுப்பாளர் ரமேஷ் விளக்கமளித்தார்.

Tags : Phase ,Sixth Phase Sixth ,Long Ground Floor , Accordingly, sixth phase excavation, discovery
× RELATED 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதியில் மனு தாக்கல் துவக்கம்