×

பவானிசாகர் அருகே பயங்கரம்; வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி: அதிகாரிகள் மெத்தனத்தை கண்டித்து மறியல்

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே மர்ம விலங்கு கடித்து குதறியதில் 6 ஆடுகள் பலியானது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவி–்த்தும் மெத்தனம் காட்டியதால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் ஆடுகளை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி முருகன் நகரை சேர்ந்தவர் ராசு. இவர், 10க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று தனது வெள்ளாடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மர்ம விலங்கு ஒன்று, மேய்ந்து கொண்டிருந்த வெள்ளாடுகளை கடித்து கொன்றது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராசு, விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு தாமதமானதால் நேற்று மதியம் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த 6 ஆடுகளின் உடல்களுடன் பெரிய கள்ளிப்பட்டி பிரிவு என்ற இடத்தில் சத்தியமங்கலம்- மேட்டுப்பாளையம் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற பவானிசாகர் காவல்துறையினர் மற்றும் விளாமுண்டி வனச்சரக அலுவலர் சரவணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக் கொல்வதாகவும், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மர்ம விலங்கு கடித்து இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். ஆடுகளை அடித்துக்கொன்ற விலங்கு எது? என கண்டறிந்து சிறுத்தை என உறுதி செய்யப்பட்டால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால், சத்தியமங்கலம்- மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Bhawanisagar ,Terror ,forest , Bhavanisagar, mysterious animal, goats killed
× RELATED மாஸ்கோ தீவிரவாத தாக்குதல் கைதான 4 பேர்...