×

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட்டது: இறுதிப் பயணத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: சென்னை அண்ணா நகர் வேலங்காடு மின்மயானத்தில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட்டது. திமுகவின் பொதுச் செயலாளரும் அனைவராலும் ‘‘இனமானவர்’’ என்று அழைக்கப்பட்ட பேராசிரியர் க.அன்பழகன் (98) வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 24ம் தேதியன்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு க.அன்பழகனின் உடல்நிலை மோசமடைந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று க.அன்பழகனை பார்த்துவிட்டு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளருக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் மருந்துகளை அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினர்.

இதனால் பாதுகாப்புக்காக மருத்துவமனையை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் உயிர் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் பிரிந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் உடலுக்கு திமுக கொடி போர்த்தப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர், முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு நள்ளிரவில் 2 மணி அளவில் அவரது உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து கீழ்பாக்கத்தில் உள்ள அன்பழகனின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு திமுக கொடி போர்த்தப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் வீட்டிலிருந்து பேராசிரியர் அன்பழகனின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள், பேராசிரியர் அன்பழகனுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

க.அன்பழகன் இறுதிச்சடங்கில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து சென்னை அண்ணா நகர் வேலங்காடு மின்மயானத்தில் க.அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.


Tags : K.Anabhagan ,DMK ,Tens of thousands ,funeral ,K Anbazhan ,finalists , DMK, body, cremation
× RELATED மதுரை சித்திரை திருவிழாவில் இன்று...