×

பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய வழக்கில் மார்ச் 9ம் தேதி தீர்ப்பு அறிவிப்பு

சென்னை : பெரியார் குறித்து அவதூறு கருத்து  தெரிவித்ததாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய வழக்கின் தீர்ப்பை மார்ச் 9ம் தேதிக்கு எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

பெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியடன், பொது அமைதியை குலைக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாக, அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிட விடுதலை கழக சென்னை மாவட்ட தலைவர் உமாபதி  புகார் அளித்தார்.புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாதையடுத்து சென்னை எழும்பூர் 2வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உமாபதி மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு  விசாரணைக்கு வந்தது.. அப்போது, துக்ளக் இதழில் ராமர் சீதை சிலைகள் நிர்வாணமாக கொண்டு  சென்றது தொடர்பாக எந்த ஆதார புகைப்படமும் இல்லை என்றும் 50 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் குறித்து தன்னுடைய அரசியல் லாபத்திற்காக ரஜினிகாந்த் பேசி வன்முறையை தூண்டிவிட்டதாக  மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

வன்முறையை தூண்டும் விதமாக பேசுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மத உணர்வுகளை தூண்டி பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவித்து வன்முறையை தூண்டிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது .மனுதாரரின் இந்த வாதங்களை கேட்ட  நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை மார்ச் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags : Rajinikanth ,Periyar , Periyar, slander, actor Rajinikanth, case registration, verdict, adjournment
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...