×

விருதுநகரில் கரிசல் மண்ணில் பனிப்பிரதேசத்து காய்கறிகள் விளைச்சல்: மண்ணை சரியான முறையில் பக்குவப்படுத்தி விவசாயிகள் அசத்தல்!

விருதுநகர்:  விருதுநகருக்கு கிழக்கே உள்ள காரியாபட்டி, நரிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வானம் பார்த்த பூமி என்பதால், இப்பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்யமுடியும் என்ற பொதுவான, கூற்று நிலவி வருகிறது. ஆனால் மண்ணை சரியான முறையில் பக்குவப்படுத்தி இயற்கையான இடுபொருட்களைக் கொண்டு விவசாயம் செய்தால் கரிசல் மண்ணையும் பொன்னாக்கலாம் என்கிறார், விவசாயி ராமச்சந்திரன். மாந்தோப்பு கிராமத்தில் பாரம்பரிய விவசாய குடும்பத்தில் பிறந்த ராமச்சந்திரனுக்கு 8 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. சுற்றிலும் களிமண் புழுதி பறக்கும் பகுதியில் ராமச்சந்திரனின் நிலம் மட்டும் கேரட், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட பனிப்பிரதேச காய்கறிகளை தாங்கி நின்று பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

கடந்த 10 ஆண்டு காலமாக இந்த வகை காய்கறிகளை தனது நிலத்தில் விளைவித்து வருவதாக கூறும் ராமசந்திரன், சரியான நேரத்தில், சரியான முறையில் மண்ணை பக்குவப்படுத்தி இயற்கை இடுபொருள்களான இலை தழைகள், கால்நடைகளின் கழிவுகள் உள்ளிட்டவற்றை போட்டு உழுது விதைகளை விதைக்கு வேண்டுமென்கிறார். அவ்வாறு செய்தால் நாம் எதிர்பார்க்கும் லாபத்தைக் காட்டிலும் பல மடங்கு லாபத்தை அள்ளிக்கொடுக்குமென தன்னம்பிக்கையோடு அவர் கூறுகிறார். நிலத்தில் விளையும்  காய்கறிகளை தங்களது தேவைக்குப் போக, வெளியூர்களுக்கும் கொண்டுசென்று விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.  மேலும், ராமச்சந்திரனுக்கு விவசாய பணிகளில் பக்கபலமாக இருந்து வருகிறார் அவரது மனைவி பாஞ்சாலி. தன்னம்பிக்கையோடு முயற்சியும் சேர்ந்தால், நிச்சயம் சாதிக்கலாம் என கூறும் ராமசந்திரன், சுற்று பகுதி விவசாயிகளையும் துணிந்து இதுபோன்ற விவசாயத்தில் இறங்குமாறு நம்பிக்கை தெரிவிக்கிறார்.


Tags : Harvesting ,Virudhunagar Virudhunagar Soil , Virudhunagar, gravel soil, vegetables, yields, growers, weed
× RELATED திருத்துறைப்பூண்டி பகுதியில்...