×

கோடைகாலம் நெருங்குவதால் செம்பு பாத்திரங்களின் விற்பனை மும்முரம்: இயற்கைக்கு மாறி வரும் மக்கள்

கும்பகோணம்:  கோடைகாலம் நெருங்குவதால் கும்பகோணம் பகுதியில் செம்பு பாத்திரங்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. செயற்கையை  விட்டு இயற்கைக்கு பொதுமக்கள் மாறி வருகின்றனர். ஒவ்வொரு கோடைகாலத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்த நேரங்களில்  பொதுமக்கள் வெப்பத்தை தணிக்க குளிர்பானங்களை நாடி செல்வது வழக்கம். அதேபோல் தற்போது கோடைகாலம் துவங்கும் முன்னரே வெயிலின்  தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் குளிர்பானங்களை நாட துவங்கியுள்ளனர். ஒருசிலர் கடைகளில் குடிநீர் வாங்கி குடிக்கின்றனர்.  தற்போது பெரும்பாலானோர் குடிநீர் கேன்களை வாங்கி வீட்டில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குடிநீர் பெரும்பாலான மக்களுக்கு ஒத்து  கொள்ளவில்லை.

இதனால் தற்போது பெரும்பாலான பொதுமக்கள் செம்பு பாத்திரத்தில் குடிநீர் பிடித்து வைத்து உபயோகித்து வருகின்றனர். செம்பு பாத்திரத்தில்  தண்ணீரை ஊற்றி வைத்து சில மணி நேரங்கள் கழித்து குடிக்கும்போது தண்ணீருடன் சேர்த்து செம்பு தாதுவும் நம் உடலுக்குள் சென்று உடல்  உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கும். நல்ல ரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும். ரத்தம் இயல்பாகவே  சுத்திகரிக்கப்படும். இதனால் ரத்த புற்றுநோய் உள்ளிட்ட ரத்தம் சார்ந்த உடல்நல பிரச்னை ஏற்படாது. பழங்காலங்களில் பெண்களுக்கு திருமணம்  செய்து அனுப்பும்போது செம்பு பாத்திரங்களை சீர்வரிசையில் கொடுத்து அனுப்புவர். பழங்காலங்களில் செம்பு கெண்டியில் தான் குழந்தைகளுக்கு  தண்ணீர் கொடுப்பர். அந்த தண்ணீரை குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

காலப்போக்கில் அப்பழக்கம் மறைந்து விட்டதால் இப்போதுள்ள குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே பல்வேறு உடல் பிரச்னைகளை அதிகளவில்  ஏற்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற செம்பு பாத்திரங்கள் தற்போது சென்னை, மதுரை மற்றும் திருப்பூர் பகுதிகளில் இருந்து தயாரிக்கப்பட்டு  கும்பகோணம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக வருகிறது. செம்பு தகட்டில் உருளி, தவளை, ஜக், டம்ளர், தேக்கு, பாட்டில்  உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது. கும்பகோணத்தில் கடந்தாண்டு ஒரு கிலோ செம்பு பாத்திரம் ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ  ரூ.1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து மக்களும் இயற்கைக்கு மாறி வருவதால் கடந்தாண்டை விட செம்பு பாத்திரங்களின் விற்பனை  இந்தாண்டு அதிகரித்துள்ளது என செம்பு பாத்திர வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து செம்பு பாத்திரம் விற்பனை செய்யும் ஆனந்த் கூறுகையில், கோடை காலத்தில் மக்கள் தரமற்ற பாத்திரங்களில் வைத்து தண்ணீர் குடித்து  வந்ததால் உடல்நல குறைவு ஏற்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் உடல்நலத்துக்கு நல்லது என  மருத்துவர்கள், முதியவர்கள் கூறியதையடுத்து செம்பு பாத்திரங்களின் விற்பனை விறுவிறுப்பானது. கும்பகோணத்தில் உள்ள உள்ள 50க்கும் மேற்பட்ட  செம்பு பாத்திர கடைகள் உள்ள நிலையில் கடந்தாண்டுகளில் 300 கிலோ விற்பனை செய்து வந்த நிலையில் இந்தாண்டு தினம்தோறும் 600 கிலோ  செம்பு பாத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

Tags : As the summer approaches, copper utensils are busy in Kumbakonam
× RELATED புதுவையில் மது விற்பனை கடும் சரிவு