×

சிவகங்கை மாவட்டத்தில் அடிக்கடி குழாய்கள் உடைந்து வீணாகும் காவிரி கூட்டுக் குடிநீர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து காவிரி நீர் குழாய் உடைந்து ஏராளமான நீர் வெளியேறுவது வாடிக்கையாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியதையடுத்து கடந்த திமுக ஆட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமப்பகுதிகள் பயனடைந்து வருகின்றன. தொடர்ந்து 2011ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை நகராட்சி, திருப்பத்தூர், இளையான்குடி, திருப்பத்தூர் பேரூராட்சி மற்றும் காளையார்கோவில் அருகில் உள்ள கிராமப்பகுதிகள் இணைக்கப்பட்டன. காளையார்கோவிலில் இருந்து இளையான்குடி செல்லும் வகையிலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காளையார் கோவிலில் இருந்து நாட்டரசன்கோட்டை வழியாக சிவகங்கைக்கு காவிரி நீர் செல்லும் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை அருகே மற்றும் கல்லல், பட்டமங்கலம் சாலை வழியே இந்த குழாய்கள் செல்கின்றன. இந்த குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகி வருகிறது. பல்வேறு பணிகளுக்காக சாலையோரத்தில் பள்ளம் தோண்டும் போதும் குடிநீர் செல்லும் குழாய்களை உடைத்து விடுவதால் அடிக்கடி நீர் வெளியேறி வருகிறது. இதுபோல் கல்லல் அருகே பட்டமங்கலம் சாலையில் அதிகப்படியான அழுத்தத்துடன் ஏராளமான நீர் வெளியேறுகிறது. மாதத்தில் இரண்டு, மூன்று நாட்கள் இதுபோல் பல்வேறு இடங்களில் நீர் வெளியேறி வருகிறது. அதிகப்படியான நீர் வெளியேறி அப்பகுதியில் உள்ள காலியிடங்களில் வீணாக பாய்கிறது.

நீர் வெளியேறினால் அதை சரிசெய்ய குறைந்தது இரண்டு, மூன்று நாட்கள் ஆகிறது. இவ்வாறு வெளியேறும் நீரை வைத்து பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்து விடலாம். பொதுமக்கள் கூறியதாவது, காவிரி குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து குடிநீர் வெளியேறுவது வழக்கமாகிவிட்டது. குழாய் உடைந்த தகவல் கிடைத்தவுடன் உடைப்பை சரி செய்வதில்லை. பல நாட்கள் நீர் வெளியேறிய பின்னரே சரி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் பல்வேறு-கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதுபோல் நீரை வீணாக்காமல், குழாய் உடைப்பு பிரச்சினை உள்ள இடங்களில் கூடுதலாக கண்காணிக்க வேண்டும் என்றனர்.

Tags : district ,Cauvery ,Sivaganga , In the Sivagangai district, the Cauvery water pipeline continues to break and it is becoming routine.
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி