×

சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் மூடப்பட்ட சுற்றுலா ஓட்டல் புதுப்பிக்கும் பணி தீவிரம்

சிதம்பரம்:  சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் உலக பிரசித்தி பெற்ற அலையாத்தி காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் உள்ளது. சுரபுன்னை தாவரங்களை கொண்ட இந்த காடு பரந்து விரிந்து மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கடலின் முகத்துவாரத்தில் காடுகள் போல வளர்ந்துள்ள இந்த சுரபுன்னை தாவரங்களுக்கு நடுவிலே படகில் சென்று வருவது இன்ப அனுபவம். இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர். பிச்சாவரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுற்றுலாத்துறை ஓட்டல் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த ஓட்டலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு குத்தகைக்கு விட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த ஓட்டல் மூடப்பட்டுள்ளது.

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு போதிய அளவில் சுற்றுலாப் பயணிகள் வராததாலும், அவ்வாறு வரும் சொற்ப எண்ணிக்கை பயணிகளால் ஓட்டலுக்கு போதிய லாபம் இல்லாததாலும், சுற்றுலா பயணிகளிடம் வனத்துறை அதிகாரிகள் கெடுபிடியாக நடந்து கொள்வதாலும் வருவாய் பாதிக்கப்படுவதாக கூறி தனியார் நிர்வாகம் ஓட்டல் நடத்தும் முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பிச்சாவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு இடமில்லாமல் சிதம்பரம் நகரில் தங்கி, பின்னர் பிச்சாவரத்திற்கு வந்து படகு சவாரி செய்து வந்தனர். இதுபோல் பிச்சாவரத்தில் நல்ல ஓட்டல்கள் இல்லாததால், அப்பகுதியில் உள்ள சாதாரண ஓட்டல்களில் சுற்றுலாப் பயணிகள் சாப்பிட வேண்டிய நிலை இருந்தது. அதனால் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மூடப்பட்ட, தங்கும் அறைகளுடன் கூடிய ஓட்டலை மீண்டும் புதுப்பித்து தரமான உணவை வழங்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், மூடப்பட்ட சுற்றுலாத் துறைக்கு சொந்தமான ஓட்டலை புதுப்பிக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது. இங்குள்ள சுமார் 20 அறைகளில் தற்போது புதிதாக குளிர்சாதன வசதியும், தொலைக்காட்சியும் பொருத்தப்பட்டு உள்ளது. இன்னும் சில தினங்களில் மேசை, நாற்காலிகள், அதைத் தொடர்ந்து கட்டில், மெத்தை போன்ற உபயோகப் பொருட்களும் விரைவில் புதிதாக பொருத்தப்பட உள்ளது. இந்த ஓட்டல் மற்றும் அறைகளில் பழைய பொருட்களை புதிதாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பணிகளை விரைவாக முடித்து வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த ஓட்டலை மீண்டும் திறக்க வேண்டும் என்ற இலக்கோடு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு கோடை விடுமுறை துவங்க உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் அதற்குள் சுற்றுலாத்துறை ஒட்டலை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

Tags : tourist hotel ,Pichavaram ,Chidambaram , Pichavaram near Chidambaram is known as the world famous Aliyathi forest
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!