×

ஆழ்துளை கிணற்றில் சாயப்பட்டறை கழிவுநீரை விட்டது அம்பலம்: ஒரு வாரத்தில் வெளியேற்ற அதிகாரிகள் கெடு

குமாரபாளையம்:  குமாரபாளையத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து நீல நிறத்தில் தண்ணீர் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரவு நேரத்தில் சாயக்கழிவுநீரை ஆழ்துளை கிணறு, சாக்கடையில் விட்ட தொழிற்சாலையை கண்டறிந்த மக்கள், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். சம்பவ இடதுக்கு வந்த அதிகாரிகள், ஆழ்துளை கிணற்றில் இருந்து கழிவுநீரை வெளியேற்றவும், மின்இணைப்பை துண்டிக்கவும் நடடிக்கை எடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுந்தரம் காலனி காளியண்ணன் நகரை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர் மணி என்பவரது ஆழ்துளை கிணற்றில் இருந்து நீல நிறத்தில், கடந்த வாரம் தண்ணீர் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மணி, தனது ஆழ்துளை கிணற்றுநீரில் சாயக்கழிவுநீர் கலந்துள்ளது குறித்து விசாரிக்க மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி சாமிநாதன், ஆழ்துளை கிணற்றில் ஆய்வு செய்தார்.

சாயக்கழிவுநீர் கலந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். அதில் மணியின் ஆழ்துளை கிணற்றில் மட்டுமே தண்ணீர் நீல நிறமாக இருந்தது. மற்ற கிணறுகளில் தண்ணீர் பாதிக்கப்படவில்லை. இருந்த போதிலும் அந்த கிணறுகளின் தண்ணீரை எடுத்து உப்பின் அளவை சோதிக்க ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பிவைத்தார். இந்நிலையில் நேற்று இரவு கெட்டுப்போன ஆழ்துளை கிணற்றில் பக்கத்தில் உள்ள ஈரோடு டெக்ஸ்டைல் என்ற ஜவுளி உற்பத்தியாளரின், விசைத்தறி பட்டறையில் இருந்து, மோட்டார் மூலம் கழிவுநீர் சாக்கடையில் பம்பிங் செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், தொழிலாளர்களிடம் விசாரித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டெக்ஸ்டைல் உரிமையாளர்கள், தங்கள் பட்டறையின் நிலவறையில் சாக்கடையில் சென்ற கழிவுநீர் தேங்கி உள்ளதாகவும், அதை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றுவதாகவும் தெரிவித்தனர். ஆனால் இதை நம்பாத அப்பகுதி மக்கள், வருவாய்துறை, காவல்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.  

இதையடுத்து குமாரபாளையம் தாசில்தார் தங்கம், இன்ஸ்பெக்டர் தேவி, மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதில் பிரச்னைக்குரிய இடத்தில், கடந்த மாதம் வரை அனுமதியின்றி சாயப்பட்டறை நடைபெற்றுள்ளது தெரியவந்தது. மேலும், மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் கெடுபிடியால், அந்த சாயப்பட்டறை கடந்த மாதம் மூடப்பட்டது. இருந்த போதிலும் இரவு நேரங்களில் நிலவறையில் சாயமிடும் பணியினை உரிமையாளர்கள் செய்துள்ளனர்.  இதில் வெளியான சாயக்கழிவுநீரை குழிதோண்டி தேக்கி வைத்துள்ளனர். இந்த கழிவுநீரை சாக்கடையில் வெளியேற்ற முடியாதால், தங்களுடைய ஆழ்துளை கிணற்றில் விட்டுள்ளனர். இதனால் பக்கத்து கட்டிடத்தில் உள்ள மணியின் ஆழ்துளை கிணற்றில் நீர் கெட்டுப்போய், தண்ணீர் நீல நீறத்தில் வெளியேறியுள்ளது என தெரியவந்தது. மேலும், கழிவுநீரின் ஒரு பகுதி நிலவறையில் தேங்கிக்கிடந்தது.

இந்த கழிவுகளையும், ஆழ்துளை கிணற்றில் இருந்த கழிவுநீரையும் மின் மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றும்படி மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஒரு வாரகாலத்தில் கழிவுநீரை முற்றிலும் வெளியேற்றிய பிறகு இந்த கட்டத்திற்கான மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஜவுளி உற்பத்தியாளர் மணியின் கிணற்றை தொடர்ந்து, கடந்த வாரத்தில் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் கெட்டுப்போயுள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். நிலத்தடிநீர் கெட்டுப்போனதால், தங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி மூலம் லாரிகளில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். குடிநீர் கிணற்றில் சாயக்கழிவுநீரை கலந்தது தொடர்பாக அதிகாரிகளால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. கழிவுநீரை வெளியேற்றினாலும், நிலத்தடி நீர் கெட்டுப்போயுள்ளதால், ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Tags : well , The blue water from the deep well in Kumarapalayam caused a stir
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...