×

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் காலமானார்: சென்னை மருத்துவமனையில் நள்ளிரவில் உயிர் பிரிந்தது,.. மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன்(97) உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் உயிர் பிரிந்தது. திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் கீழ்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில ஆண்டுகளாக வயோதிகம் காரணமாக உடல்நலம் குன்றிய நிலையில் வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 24ம் தேதியன்று மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார். அவ்வபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து வந்தார்.

இதற்கிடையே, நேற்றிரவு அன்பழகனின் உடல்நிலை மோசமடைந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து ஸ்டாலின் உடனடியாக அப்பல்லோ சென்று க. அன்பழகனை பார்த்துவிட்டு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளருக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் மருந்துகளை அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார். இதனைதொடர்ந்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையை நோக்கி செல்ல துவங்கினர். இதனால் மருத்துவமனை அருகே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்து, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் உயிர்பிரிந்தது. இதனை மருத்துவனை  நிர்வாகம் உறுதி செய்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக அப்பல்லோபுறப்பட்டு சென்றார். அவருடன் திமு கழகத்தின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள்  மற்றும் பலர் உடன் சென்றனர்.

இதனிடையே, க. அன்பழகனின் மறைவையொட்டி, திமுக கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உற்றத் தோழராகவும், 43 ஆண்டுகள் தொடர்ந்து கழகத்தின் பொது செயலாளராகவும், கழக ஆட்சியில் சமூகு நலம், மக்கள் நல்வாழ்வு, கல்வி மற்றுமத் நிதி ஆகிய துறைகளின் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும், தமிழாய்ந்த பேராசிரியராகவும் விளங்கிய கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் சில நாட்கள் உடல் நலிவுற்றிறிருந்து இன்று அதிகாலை(07/03/2020) சுமார் 1 மணியளவில் மறைவை எய்தியதையொட்டி கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல்  ஓரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதோடு, கழக கொடிகள் 7 நாட்களும் அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அவரது உடல் கீழ்பாக்கத்தில் உள்ள அன்பழகனின் வீட்டுக்கு எடுத்து செல்லப்படுகிறது. முன்னதாக அவரது உடலுக்கு திமுக கொடி போர்த்தப்பட்டு அதன்பின் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
க.அன்பழகன், திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தை சேர்ந்த கல்யாண சுந்தரானார் மற்றும் சுவர்ணாம்பாள் தம்பதிக்கு  கடந்த 1922ம் ஆண்டு டிசம்பர் 19 அன்று மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர்ராமையா என்பதாகும்.

* 1962-1967 சட்டமேலவை உறுப்பினர்

* 1967 - 1971 மக்களவை உறுப்பினர்

* 1971 மாநில சமூக நலத்துறை அமைச்சர்

* 1977 புரசைவாக்கம்  ெதாகுதியில் வெற்றி

* 1980 புரசைவாக்கம்தொகுதியில் வெற்றி

* 1984 பூங்கா நகர்  தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி.பின்னர் தமிழீழ  பிரச்னைக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

* 1991 சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்

* 1996 துறைமுகம் தொகுதியில் வெற்றி

* 1996-2001 தமிழக கல்வி அமைச்சர்

* 2001 துறைமுகம் தொகுதியில் வெற்றி.

* 2006 துறைமுகம் தொகுதியில் வெற்றி.

* 2006-2011ம் ஆண்டில் நிதியமைச்சராக பணியாற்றினார்.

*  2011 சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

கலைஞரின் அன்பு தோழர் க.அன்பழகன்

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில், எம்.கல்யாண சுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு 19.12.1922ல் மகனாக பிறந்தார். அன்பழகனின் இயற்பெயர் இராமையா. பேராசிரியர் அன்பழகன் வெற்றிச்செல்வி என்பவரை 21-2-1945ம் ஆண்டு மணந்தார். பெரியார் தலைமையில் இந்த திருமணம் நடந்தது. அன்பழகனுக்கு அன்புச்செல்வன் என்னும் மகனும், இரண்டு மகள் உள்ளனர். வெற்றிச்செல்வி மறைவிற்குப் பின்னர் சாந்தகுமாரி என்பவரை அன்பழகன் மணந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு என்ற மகனும், ஜெயக்குமாரி என்ற மகளும் உள்ளனர். சாந்தகுமாரி 23-12-2012ம் தேதி மறைந்தார்.

அன்பழகன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ.(ஹானர்ஸ்) தமிழ் படித்துள்ளார். இது கலைமுதுவர்(எம்.ஏ) பட்டத்திற்கு இணையானது. படிப்பை முடித்த பின் 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். திமுக தலைவர் கலைஞர், பொதுச்செயலாளர் அன்பழகனின் நட்பு என்பது 1942ல் இருந்து துவங்கியது. அப்போது பேரறிஞர் அண்ணா தலைமையில் ஒரு விழா நடந்தது. அதில் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவனாக அன்பழகன் முதல் முறையாக மேடையில் ஏறி பேசினார். அதை அப்போது கீழே அமர்ந்திருந்த கருணாநிதி கேட்டு ரசித்தார். பேசி முடித்ததும் அண்ணா கருணாநிதிக்கு அன்பழகனை அறிமுகம் செய்து வைக்கிறார். அப்போது தொடங்கிய நட்பு என்பது நீண்டு வந்தது. அமைச்சர், ஒரு முறை சட்டமேலவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

திமுகவின் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து களப்பணியாற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் பேராசிரியர் அன்பழகன். 1977ம் ஆண்டு முதல் திமுவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். கலைஞர் இருந்தவரை எந்த நிகழ்ச்சியாக இருக்கட்டும் இரண்டு பேரும் ஒன்றாக சென்று வந்தனர். நிகழ்ச்சி இல்லாத நேரத்தில் அண்ணா அறிவாலயத்திலும், கலைஞரின் கோபாலபுரத்திலும் இரண்டு பேரும் ஒன்றாக சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். கலைஞரை விட அன்பழகன் வயதில் மூத்தவராக இருந்தாலும் இருவரின் நட்பு சொல்லியாகாது. அந்த அளவுக்கு நட்புடன் இருந்து வந்தனர். தீவிர கட்சி பணியாற்றி வந்த அன்பழகன் வயது மூப்பு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு முதல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். நண்பர் கட்டிலில் படுத்து கொண்டிருக்கிறாரே என்று அப்போது அவரை பார்க்க சென்ற கலைஞர் கண்கலங்கியதும் உண்டு.

மேலும் அவருக்கு வீட்டில் வைத்தே டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவ்வப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்று அன்பழகன் உடல்நலம் குறித்து கேட்டறிந்து வந்தார். எம்பி, எம்எல்ஏ வேட்பாளர் அறிவிப்பாக இருக்கட்டும், கட்சியில் புதிய பதவி யாருக்கு வழங்கினாலும் க.அன்பழகனிடம் ஆசி பெற்று மு.க.ஸ்டாலின் அறிவித்து வந்தார். மேலும் க.அன்பழகனை தனது பெரியப்பா என்றே மு.க.ஸ்டாலின் அழைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 24ம் தேதி இரவு பேராசிரியர் அன்பழகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சோதனை காலத்தில் கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்த அன்பழகன்
அண்ணா திமுகவை நிறுவி விட்டு அதை வளர்க்கும் வேலைகளில் இறங்கிய போது, மேடை மேடையாக பேசியது அன்பழகனும், கருணாநிதியும் தான். காசில்லா அன்பழகனுக்கு பயண காசு கொடுத்து மேடையில் ஏறி பேச வைக்கும் அளவிற்கு கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் நட்பு இருந்தது. மிகவும் நெருக்கம் அந்த நட்பு தான் சோதனை காலத்திலும் கை கொடுத்தது. அண்ணா இறந்த போது, கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்தவர் அன்பழகன் தான். அதே போல், அண்ணாவிற்கு பின் எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்த பின் கூட அன்பழகன் கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்தார். திமுக மூன்று முறை வரிசையாக தேர்தலில் தோற்றபோது கூட, அன்பழகன் கருணாநிதி பக்கமே நின்றார்.

அதே போல், மிக முக்கியமான காலகட்டமான எமெர்ஜென்சி பிரச்னையிலும் கருணாநிதி-அன்பழகன் ஒன்றாகவே இருந்தனர். இந்தியாவில் அப்போது நடந்த கைது பெரிய பிரச்னையை உண்டாக்கியது. நிறைய பேர் கட்சி மாறினார்கள். ஆனால் கருணாநிதி, அன்பழகன் நட்பு மட்டும் ஆலமரம் போல உறுதியாக வளர்ந்து கொண்டே இருந்தது. திமுகவில் மிகப்பெரிய பிளவாக கருதப்பட்ட, வைகோ சென்ற போதும் கூட அன்பழகன் கட்சியில் உறுதியாக இருந்தார். அப்போது சில முன்னணி கட்சிகள் அவருக்கு அழைப்பு விடுத்தன. ஆனால் அன்பழகன் தாய் கழகத்தை விட்டும், தாயை போன்ற நண்பனை விட்டும் ஒரு அடி கூட நகரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘திராவிட அறிவுக் கருவூலம்’
பேராசிரியர் பெருந்தகையின் பொன்விழா ஆண்டில் அவர்குறித்து முத்தமிழறிஞர் கலைஞர் பேசியதாவது: “30 ஆண்டுகளுக்கு முன்னர், திருவாருரில் “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்” என்ற ஒரு மாணவர் அமைப்பினைத் தொடங்கினேன். சேலம், இராசிபுரம் போன்ற ஊர்களில் அதற்குக் கிளைகள் அமைந்தன. அப்போது நாட்டில் ஏற்பட்டிருந்த இந்தி எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கங்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு உணர்ச்சியும், எழுச்சியும் ஊட்டிடத் தக்கவிதத்தில் இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது.இதனுடைய முதலாவது ஆண்டுவிழாவினை 1943 -ஆம் ஆண்டு திருவாரூரில் நடத்தினேன். முக்கிய சொற்பொழிவாளராக அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வகுப்பு மாணராயிருந்த ஒருவரை அழைத்தேன். ஒல்லியான, மெலிந்த உருவம் என்றாலும் துல்லியமான செந்தமிழ்ப் பேச்சு, அணை உடைந்த வெள்ளமெனத் தடைபடா அருவி நடை, தன்மானக் கருத்துக்கள், தமிழ் முழக்கம்- இவைகளால் எங்களையெல்லாம் ஈர்த்துத் தன்வயமாக்கிக் கொண்டார், அந்த சொற்பொழிவாளர். அவர்தாம் இன்றைய தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள். அவர் இன்றைக்கு 50 ஆண்டைக் கடந்து நிற்கிறார் என்பதை நினைத்திட நெஞ்சு இனிக்கிறது.

என்னைவிட ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளே மூத்தவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டு, கல்லிலும் முள்ளிலும் நடந்து, அல்லும் பகலும் சுற்றிச் சுழன்று, கண்ணீரும், செந்நீரும் சிந்தி இந்தக் கழகத்தை வளர்த்த பெரும் தொண்டர்களின் வரிசையில் அவருக்கு ஒரு சிறப்பான இடமுண்டு என்பதனை நாடு நன்கு அறியும். நெஞ்சத்தில் தோன்றும் கருத்துக்களை அஞ்சாமல் எடுத்துரைத்து- யாரிடம் பேசுகிறோம், அவர்கள் என்ன சொல்வார்கள்? என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பதில் அவர் ஒரு தனித்தன்மை கொண்டவர். இப்படிப்பட்ட தன்மான உணர்வுகளையே குறிக்கோளாகக் கொண்ட தமிழ் குடும்பத்தின் முன்னவர் பொதுத் தொண்டிலேதான் வாழ்வில் பெரும் பகுதியை கழித்து வரும் அன்பாளர் பொன்விழா வயதடைந்தார் என்கின்ற சிறப்பான செய்தியினை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன்.

அவர் மேலும் பல்லாண்டுகள் தொடர்ந்து தூய தொண்டாற்றி, எங்கள் இலட்சியப் பயணத்தில் இடையறாது நடைபோட விரும்பி, மனமார வாழ்த்துகின்றேன்” என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். இந்தியை எதிர்த்து பதவி துறப்பு: இந்தி எதிர்ப்பு போராட்டம் உட்பட தமிழர்களின் உரிமை காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டவர். ஈழத்தமிழருக்கு தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தவர் என்னும் சிறப்புக்கும் சொந்தக்காரர் இனமான பேராசிரியர்.

ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்

“நான் கழகத்தின் தலைவர். அவர் பொதுச்செயலாளர்! இருவரும் கலந்தே முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கழக சட்டதிட்டம். எங்களுக்கு விதிமுறைகளை வகுத்துக் கொடுத்து இருந்தாலும் நாங்கள் இருவரும் சேர்ந்து முக்கியமான முடிவுகளை எடுத்திட தலைமை நிர்வாகக் குழுவையோ, செயற்குழு, பொதுக்குழுக்களையோதான் கூட்டுகிறோம். எங்கள் உறவை வெட்டி முறித்திடக் கூட வீணர்கள் எண்ணினார்கள். ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் நாங்கள் என்பதை எங்கள் சகோதரப் பாசத்தின் வாயிலாக வெளிப்படுத்துவது மட்டுமல்ல, தமிழ் இனமும் நாடும் வாழ இந்தக் கழகம் வாழவேண்டும் என்று நாங்கள் வாழும் வரையிலும் இணைந்து நின்றே இலட்சியப் பயணம் வகுத்திடுவோம்!’’


மு.க.ஸ்டாலின் இரங்கல்
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் 7 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இன்று முதல் ஒரு வார காலம் கழகக் கொடிகள் அரைக்கம்பத்தில்  பறக்கவிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.



Tags : K Anbazhagan ,DMK ,K Anbalagan ,Chennai ,hospital , DMK General Secretary, K Anbalagan, passed away, Madras Hospital, survived
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்