×

காங்கிரஸ் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு அகமது படேலுக்கு வருமான வரி சம்மன்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் நிதி பரிமாற்றங்களில் வரி ஏய்ப்பு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, கட்சியின் பொருளாளர் அகமது படேலுக்கு  வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மத்தியப் பிரதேச முதலவர் கமல்நாத்தின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் வீடுகள் உட்பட 52 இடங்களில் வருமான வரித்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இதில், ரூ.281 கோடி அளவுக்கு ஹவாலா பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்ட்டது. இது தொடர்பாக தெலங்கானா, ஆந்திராவில் 42 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் முறைகேடுகள், வரி ஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் வருமானம், நன்கொடை மற்றும் செலவுகள் குறித்து அதன் பொருளாளர் அகமது படேலிடம் விசாரிக்க வருமான வரித்துறை முடிவு செய்தது. இது தொடர்பாக கடந்த மாதம் அவருக்கு சம்மன் அனுப்பியது. அப்போது, தனக்கு உடல்நிலை சரியில்லை என அவர் கூறினார். இதையடுத்து, தற்போது நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை 2வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் முதல் வாரம் அவர் வருமான வரித்துறை முன் ஆஜராக வேண்டும். ஆனால், இது குறித்து அவர் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


Tags : Ahmed Patel , Congress, Tax Evasion, Ahmed Patel, Income Tax
× RELATED காங்கிரஸ் பொருளாளராக அஜய் மாகென் நியமனம்