×

டெல்லி கலவரம், 7 எம்பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரத்தால் 5வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

புதுடெல்லி: டெல்லி வன்முறை சம்பவத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்றும் அமளியில் ஈடுபட்டு, கோஷம் எழுப்பினர். இதனால், தொடர்ந்து 5வது நாளாக இரு அவைகளும் நேற்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. ஹோலி விடுமுறைக்குப் பின் நாடாளுமன்றம் வரும் 11ம் தேதி மீண்டும் கூடுகிறது. வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 46 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி விவாதிக்க அனுமதிக்கும்படி கோரி, கடந்த 2ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ம் கட்ட தொடர் தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால், ஏற்கனவே தொடர்ச்சியாக 4 நாட்கள் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், நேற்று முன்தினம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடத்திய அமளியின்போது, சபாநாயகர் மேஜையில் இருந்த ஆவணங்களை எடுத்து வீசியதற்காக காங்கிரஸ் எம்பி.க்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், 5வது நாளாக மக்களவை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியதும் திமுக, காங்கிரஸ், இந்தியன் முஸ்லிம் லீக் மற்றும் இதர எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு பதாகைகளுடன் சென்று, டெல்லி வன்முறை பற்றி விவாதிக்க அனுமதி கோரியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர். 7 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி எம்பி.க்கள் தங்கள் கையில் கறுப்பு நிற பட்டையை கட்டியிருந்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் கையில் கறுப்பு பட்டை அணிந்திருந்தார். ஆனால், அவையின் மையப் பகுதிக்கு அவர் வரவில்லை.

மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி அவையின் மையப் பகுதிக்கு சென்று, தனது கோரிக்கையை வலியுறுத்தினார். அப்போது, நாடாளுமன்ற விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை அவர் கையில் வைத்திருந்தார். அமளி தொடர்ந்ததால் நண்பகல் 12 வரை ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி தொடர்ந்தது. இந்த அமளிக்கு இடையே கனிமப் பொருட்கள் சட்ட திருத்தம், திவால் சட்டத் திருத்தம் ஆகியவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. அமளி தொடர்ந்ததால் மக்களவை 5வது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, ஹோலி விடுமுறைக்குப் பிறகு வரும் 11ம் தேதி மக்களவை மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டது.

ராகுல் போராட்டம்: மக்களவையில் காங்கிரஸ் எம்பி.க்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பாக நேற்று போராட்டம் நடந்தது. இதில், ராகுலும் எம்பி.க்களும் கருப்பு பட்டை அணிந்து முழக்கமிட்டனர். இதில், கட்சியின் மூத்த தலைவர்கள் கவுரவ் கோகாய், சசிதரூர் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   கவுரவ் கோகாய் கூறுகையில், “நாங்கள் பயப்படமாட்டோம். டெல்லி கலவரத்தை குறித்து விவாதிக்க கோருவதற்காக நாங்கள் அச்சப்பட மாட்டோம். இந்த பிரச்னையை தொடர்ந்து எழுப்புவோம். உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முழக்கமிடுவோம்,” என்றார்.

நேற்றும் வராத ஓம் பிர்லா
மக்களவையில் நடக்கும் அமளியால் அதிருப்தி அடைந்துள்ள சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று முன்தினம் அவைக்கு வரவில்லை. அன்றைய தினம்தான், காங்கிரஸ் எம்பி.க்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்றும் ஓம் பிர்லா அவைக்கு வரவில்லை.

எதிர்கட்சிகளும், அரசும் பேச்சு நடத்த வேண்டும்: வெங்கையா நாயுடு வேண்டுகோள்
மாநிலங்களவை நேற்று காலை தொடங்கிய பிறகு, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தனது துறை சம்பந்தப்பட்ட சில ஆவணங்களை தாக்கல் செய்ய எழுந்தார். அப்போது, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து நின்று டெல்லி வன்முறை சம்பவத்துக்கு எதிராக கோஷமிட்டனர்.  அவர்களிடம், அவையை நடத்த  அனுமதிக்கும்படி அவையின் தலைவர் வெங்கையா நாயுடு வேண்டினார். ஆனால், சில உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டு, கோஷமிட்டனர். அப்போது பேசிய வெங்கையா, ‘‘அவையில் நடக்கும் விஷயங்கள் கவலை அளிக்கிறது.

பட்ஜெட் கூட்டத் தொடரில் என்ன நடக்கிறது என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றம் அரத்தமுள்ளதாக செயல்பட அரசும், எதிர்க்கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். அமளி தொடர்வதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது. ஹோலி விடுமுறைக்குப்பின் மாநிலங்களவை வரும் 11ம் தேதி கூடும்,’’ என்றார்.  

சஸ்பெண்ட்டை திரும்ப பெற தயாநிதி மாறன் வேண்டுகோள் மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியதாவது:
இங்கு நாம் அனைவரும் நண்பர்கள். ஆனால், இங்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் பற்றி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவலைப்படக் கூடாத வகையில், இந்த அவைக்கு நடுவே லட்சுமண் ரேகை போடப்பட்டு இருப்பதை நான் ஒரு போதும் கேள்விபட்டதில்லை. அவையில் கேலிக்கூத்தான விஷயங்கள் நடக்கின்றன. கொரானா வைரஸ் பற்றி சுகாதாரத் துறை அமைச்சர் பேசியபோது, நாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்தோம். அதே நேரத்தில் 50 பேர் பலியான டெல்லி கலவரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இதற்கு பதில் அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் அவைக்கு வரவில்லை.

பிரதமரும் வரவில்லை. அதனால், உறுப்பினர்கள் கோபம் அடைவது இயற்கை. ஜனநாயக முறைப்படியான, நாடாளுமன்ற அமைப்பில், இத்தனை நாட்களாக சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் கருத்தை தெரிவிக்க நீங்கள் ஏன் அனுமதிப்பதில்லை? காங்கிரஸ் எம்பி.க்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்த முடிவை நீங்கள் (சபாநாயகர்) திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

‘பிக்பாக்கெட் அடித்தவரை தூக்கில் போட முடியாது’
நேற்று காலை மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியதும், 7 எம்பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெறும்படி திமுக எம்பி தயாநிதி மாறன், திரிணாமுல் எம்பி சுதீப் பந்தோபத்யாய், தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே ஆகியோர் வலியுறுத்தினர். மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ‘‘எதன் அடிப்படையில் எம்பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என தெரியவில்லை. பிக்பாக்கெட் அடித்தவரை தூக்கு மேடைக்கு அனுப்ப முடியாது. அதனால், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,’’ என்றார். இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களை பிக்பாக்கெட் திருடர்களுடன் ஒப்பிடுவது வினோதமாக உள்ளது.

இது, துரதிருஷ்டவசமானது. அவர் இவ்வாறு பேசியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. சபாநாயகர் மேஜையில் இருந்து ஆவணங்கள் பறிக்கப்பட்ட சம்பவம் நாடாளுமன்ற வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகளில் நடந்தது இல்லை,’’ என்றார். அப்போது, அவையை நடத்திய பாஜ எம்பி கிரித் பிரேம்ஜிபாய் சோலங்கி, ‘‘கடந்த 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை அவையில் நடந்த சம்பவங்களை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலான குழு ஆராயும்,’’ என்றார்.


நூதன முறையில் எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய திரிணாமுல் எம்பி
டெல்லி கலவரம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி அளிக்கப்படாததற்கு திரிணாமுல் எம்பி டெரிக் ஓ பிரைன் நேற்று நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தார்.  இவர் மாநிலங்களவைக்கு செல்லாமல் நாடாளுமன்ற வளாகத்தின் முதல் தளத்தில் நின்று பேசிய அவர், ‘‘டெல்லி கலவரம் குறித்து அவையில் விவாதம் அனுமதிக்கப்படவில்லை. அதனால்தான், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேசுகிறேன். டெல்லி கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறையில் ஈடுபட்டது யார் என நாம் அனைவருக்கும் தெரியும். இந்த கலவரங்கள், படுகொலைகளின் மூலம், ஒரே ஒரு அரசியல் கட்சி ஆதாயம் அடைவதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. அவர்கள் நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளனர். ஏனென்றால், கடுமையான கேள்விகளுக்கு பதில் அளிக்க அவர்கள் விரும்பவில்லை. இதுபோன்ற சிக்கலான நேரத்தில் ஒரு எதிர்கட்சி உறுப்பினரால் என்ன செய்ய முடியும்? நான் காத்திருக்க போவதில்லை. எனது பேச்சு இந்திய இளைஞர்களை சென்றடையும் என நம்புகிறேன்,’’ என்றார். இந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : riots ,Delhi ,MPs ,Parliament , Delhi riots, 7 MPs suspended, Parliament
× RELATED மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்:...