×

தேசத்துரோக சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க விதிமுறை வகுக்கக்கோரிய மனுவை விசாரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தேசத் துரோக சட்டத்தை அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்க, இச்சட்டத்தை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்க உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்துள்ளது. கர்நாடக மாநிலம், பிதாரில் உள்ள ஷாகின் பள்ளியில் கடந்த ஜனவரி 21ம் தேதி பள்ளி மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவு ஆகியவற்றை விமர்சித்து நாடகம் நடத்தினார்கள். இது தொடர்பாக சமூக சேவகர் நீலேஷ் ரக்‌ஷயால் அளித்த புகாரின் பேரில் பள்ளி முதல்வர், ஊழியர்கள், மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மீது கடந்த ஜனவரி 26ம் தேதி போலீசார் தேசத் துரோக வழக்கு செய்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவில், ‘பீதார் பள்ளி நிர்வாகம், மாணவர்கள் மீது பதியப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

தேசத் துரோக சட்டத்தை அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்க, இச்சட்டத்துக்கு முறையான வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல் உத்சவ் சிங் பெயின்ஸ் ஆஜரானார். ஆனால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில், ‘குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடகம் நடத்த அனுமதித்த கர்நாடக பள்ளி நிர்வாகம் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யும்படி  மனுதாரர் கோர முடியாது. இதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். இது தொடர்பாக உரிய அமைப்பை நாட மனுதாரருக்கு அனுமதி அளிக்கிறோம்,’ என்று தெரிவித்தனர்.

161வது வழக்கு
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே 160 வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அவற்றை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சகேத் கோகலே என்பவர் இச்சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்துள்ள புதிய மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றது. இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் இந்த மனுக்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.



Tags : Supreme Court ,misuse , Treason Act, Rule, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...