×

ஐஎஸ்எல் கால்பந்து அரை இறுதி 2வது சுற்றில் சென்னை- கோவா பலப்பரீட்சை

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதல் அரை இறுதி 2வது கட்ட ஆட்டத்தில் சென்னை - கோவா அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரை இறுதி ஆட்டங்கள் உள்ளூர்/வெளியூர் அடிப்படையில் 2 கட்டங்களாக நடக்கின்றன. அரை இறுதிக்கு தகுதிப் பெற்ற  எப்சி கோவா - சென்னையின் எப்சி,  அத்லெடிகோ டி கொல்கத்தா - பெங்களூரு எப்சி அணிகள் இதில் மோதி வருகின்றன. சென்னையில் நடைபெற்ற அரை இறுதி-1 முதல் கட்ட ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய  சென்னையின் எப்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தியது. அடுத்து இதே அணிகள் மோதும் 2வது கட்ட ஆட்டம் கோவாவில் இன்று நடைபெற உள்ளது. சென்னை அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றிருப்பதால் இன்றைய போட்டியில் டிரா செய்தாலே எளிதில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். கோவா வெற்றி பெற்றாலும் வெளியூர் போட்டியில் எந்த அணி அதிக கோல் அடித்ததோ அந்த அணி பைனலுக்கு முன்னேறும்.

உதாரணமாக கோவா அணி சென்னையில் ஒரு கோல் அடித்துள்ளது. சென்னை அணி கோவாவில் 2 கோல் அடித்து தோற்றாலும் பைனல் வாய்ப்பு கிடைக்கும். கோல் ஏதும் அடிக்காமல் தோற்றால் சென்னையில் ஒரு கோல் அடித்திருப்பதால் கோவா அணி பைனலுக்கு முன்னேறிவிடும்.  கடந்த 9 போட்டியில் ஒன்றில் கூட தோல்வியை சந்திக்காததால் சென்னை அணி மிகுந்த உற்சாகமாக உள்ளது. லீக் சுற்றில் கோவாவிடம் 2 முறை தோற்ற சென்னை, அரை இறுதி போட்டியின் முதல் சுற்றில் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது. அதனால் சென்னை அணி புதிய பயிற்சியாளர் ஓவன் கோயல் வழிகாட்டுதலில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முனைப்பு காட்டும். அதே நேரத்தில்   உள்ளூரில் விளையாடுவது கோவா அணிக்கு மிகவும் சாதகமான அம்சம். நடப்புத் தொடரில் கோவாவில்  நடந்த 9 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே கோவா அணி தோற்றுள்ளது. 7ல்  வெற்றி, ஒரு போட்டியில் டிரா செய்துள்ளது.

கோல் அடிப்பதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் கோவா  உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சென்னைக்கு பதிலடி கொடுக்க ஆர்வம் காட்டும். இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக காட்டப் போகும் வேகம் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும்.

நாளை கொல்கத்தாவில்...
கொல்கத்தா-பெங்களூரு அணிகள் 2வது அரை இறுதியின் 2ம் கட்ட போட்டியில் நாளை விளையாடுகின்றன. இப்போட்டி கொல்கத்தாவில் நாளை நடக்கிறது. பெங்களூருவில் நடந்த முதல் கட்ட ஆட்டத்தில் பெங்களூரு 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தி முன்னிலை வகிக்கிறது.


Tags : Chennai ,round ,ISL Football Semi-Final ,Goa Multi-Disciplinary Action , ISL Football, Semi-Final, Chennai, Goa
× RELATED ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி...