×

சோழிங்கநல்லூரில் பரபரப்பு: வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு: கணக்கில் வராத பணம் பறிமுதல்

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கணக்கில் வராத அதிகளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சோழிங்கநல்லூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் மற்றும் புதிய பட்டா பெறுவதற்கு அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.  இதையடுத்து ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பி குமரன் உள்ளிட்ட 2 டிஎஸ்பிகள் தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 5 மணியளவில் சோழிங்கநல்லூர், குமரன் நகர் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தில் நுழைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நுழைந்ததும் வாயில் அருகே இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளே இருந்தவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே அலுவலகத்தில் இருந்த அனைவரிடமும் போலீசார் சோதனை மற்றும் விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகத்தில் இருந்தவர்களை சோதனை செய்து தீவிரமாக விசாரித்து வெளியே அனுப்பினர்.  மேலும் வட்டாட்சியர் அலுவலகம் பகுதியிலுள்ள கடைகளில் பணம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் எந்த தகவலும் கூற மறுத்துவிட்டனர். முழுமையான சோதனை முடிந்த பிறகே வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது? என்பது தெரிய வரும். 


Tags : Police raid ,area ,Chottanikalur ,Sholinganallur ,Taluk ,Tabloid , Cholinganallur, Circuit Office, Bribery Police Raid
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி