×

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி

சென்னை: திருவள்ளூர் அடுத்த காக்களூர்  தொழிற்பேட்டையில் நிக்கல் குரோம் பிளேட் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த  தொழிற்சாலைக்குள் உள்ள கழிவுநீர் தொட்டி நேற்று நிரம்பி வழிந்தது. இதையடுத்து தொட்டியை சுத்தம் செய்வதற்காக புட்லூர் கிராமத்தை சேர்ந்த சந்த்ரு (35), வேலவன் (40) ஆகிய 2 பேரை தொழிற்சாலை நிர்வாகத்தினர் அழைத்து வந்துள்ளனர். எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தொட்டிக்குள் இறங்கி இருவரும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஷவாயு தாக்கி கழிவுநீர் தொட்டிக்குள் இருவரும் மயக்கமுற்று விழுந்தனர்.   இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த  தீயணைப்பு வீரர்கள், தொட்டிக்குள் இறங்கி  சந்துரு, வேலவன் ஆகிய இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், விஷவாயு தாக்கியதால் மூச்சுத்திணல் ஏற்பட்டு இருவரும் இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து சடலங்களை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து வெளியே எடுத்தனர்.

இதற்கிடையே விஷவாயு தாக்கி இருவர் இறந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து  இருவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். இருவரது சடலங்களையும் சம்பவ இடத்தில் இருந்து எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்பெனி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் அலட்சியமாக இருந்த நிர்வாகத்தினரை கைது செய்ய வேண்டும். விஷவாயு தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.  தகவல் அறிந்ததும் திருவள்ளூர் வட்டாட்சியர் விஜயகுமாரி, டிஎஸ்பிக்கள் திருவள்ளூர் கங்காதரன், ஊத்துக்கோட்டை சந்திரதாசன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், வெங்கடேசன், சவுந்தர்ராஜன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், மற்றும் வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.  

இழப்பீடு வாங்கித்தரவும், நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். அதன்பிறகு சந்துரு, வேலவன் ஆகியோரது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும்,  திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.



Tags : Waste water, gas, 2 workers killed
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...