×

கேட்பாரற்று நின்ற கார் மற்றும் மைதானத்தில் இருந்து 500 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்: போலீசார் விசாரணை

ஆவடி: ஆவடி பகுதியில் கேட்பாரற்று நின்ற கார் மற்றும் காலி மைதானத்தில் கிடந்த 500 கிலோ செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆவடி அடுத்த பொத்தூர் சர்ச் அருகே நேற்று அதிகாலை நின்றிருந்த ஒரு காரில் இருந்து நீண்ட நேரமாக ஹாரன் ஒலித்துக் கொண்டிருந்தது. இதனால், அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வந்து பார்த்தபோது, உள்ளே யாரும் இல்லை.  இதுபற்றி சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, எஸ்.ஐ நாகேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, காரின் இன்ஜின் பேனட்டை கழட்டி, ஹாரன் ஒயரை துண்டித்து ஒலியை நிறுத்தினர். பின்னர், காரின் கதவுகளை திறந்து சோதனை செய்தனர்.  அப்போது காரின் பின்பகுதியில் 10 செம்மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் எடை சுமார் 200 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் போலீசார் செம்மரக்கட்டையுடன் காரை ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

 பின்னர், இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் செம்மரக்கட்டைகளை  கடத்தி வந்தபோது எதிர்பாராவிதமாக ஹாரன் ஒலி தொடர்ந்து வந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் ஓடிவர கடத்தல் கும்பல் காரை நடுரோட்டில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது.  மேலும், போலீசார் காரின் பதிவு எண் மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் செம்மரக்கட்டைகளை கடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.  மற்றொரு சம்பவம்: ஆவடி அடுத்த வீராபுரம், லக்கி நகரில் உள்ள காலி மைதானத்தில் செம்மரக்கட்டைகள்  கிடப்பதாக நேற்று காலை ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலையத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு 300 கிலோ எடையுள்ள 5 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

அந்த செம்மரக்கட்டைகளை சரக்கு ஆட்டோவில்  ஏற்றிக்கொண்டு ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து செம்மரக்கட்டைகளை அனாதையாக போட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : stadium ,grounds , Car, sheep confiscation, cops
× RELATED அணியின் நலனுக்காக புதிய...