×

மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன இணைப்பு சேவையில் 10.49 லட்சம் பேர் பயணம்: நிர்வாகம் தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன இணைப்பு சேவை மூலம் 10.49 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக வாகன இணைப்பு சேவையை அறிமுகப்படுத்தியது. அதன்படி, 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ சேவையும், 5 நிலையங்களில் ஷேர் டாக்சி சேவையும், 14 நிலையங்களில் வாகன இணைப்பு சேவையும், 3 நிலையங்களில் டெம்போ டிராவலர் சேவையும் செயல்பட்டு வருகிறது.   இந்தநிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 44,495 பேர் ஷேர் டாக்சி மற்றும் ஷேர் ஆட்டோ சேவையையும், 30,914 பேர் வாகன இணைப்பு சேவையையும், 15,304 பேர் டெம்போ டிராவலர் சேவையையும் பயன்படுத்தியுள்ளதாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மொத்தமாக கடந்த மாதத்தில் 90,713 பேர் இச்சேவைகளை பயன்படுத்தியுள்ளனர். இதேபோல், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பிப்ரவரி 2020 வரை மொத்தமாக 10,49,065 பேர் இந்த வாகன இணைப்பு சேவையால் பயனடைந்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த மாதம் ஷேர் டாக்சி சேவையை கோயம்பேட்டில் 2,612 பேரும், ஷேர் ஆட்டோ சேவையை கிண்டியில் 12,396 பேரும், வாகன இணைப்பு சேவையை விமான நிலையத்தில் 14,824 பேரும் பயன்படுத்தியுள்ளனர். டெம்போ டிராவலர் சேவையை ஆலந்தூரில் 11,236 பேர் பயன்படுத்தியுள்ளனர். தொடர்ந்து 32 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகன இணைப்பு சேவையை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Tags : stations , Metro Railway Stations, Vehicle Connection Service
× RELATED மாவட்டத்தில் 347 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா