×

பொதுமக்களுக்கு இடையூறாக அமைத்த எம்ஜிஆர் சிலை திடீர் அகற்றம்: பல்லாவரம் அருகே பரபரப்பு

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, பிரதான சாலையோரத்தில், எம்ஜிஆரின் உருவ சிலை அதிமுகவினரால் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த சிலையின் பின்புறம் உள்ள வணிக வளாகத்தின் உரிமையாளர் அந்தோணிசாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.  அதில், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, பொதுமக்களுக்கும், தனது வணிக வளாகத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே அதனை அகற்ற வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள எம்ஜிஆர் சிலையை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து நேற்று சங்கர் நகர் போலீசார் மற்றும் பல்லாவரம் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து, இந்த எம்ஜிஆர் சிலையை கிரேன் இயந்திரம் மூலம் அகற்றினர். தகவலறிந்து திரண்ட அப்பகுதி அதிமுக தொண்டர்கள், சிலையை அகற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இருப்பினும் வருவாய் துறையினரும், போலீசாரும் இணைந்து, அதிமுகவினரின் எதிர்ப்பை மீறி, அந்த சிலையை  அகற்றி அருகிலுள்ள பகுதியில் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : dismantling ,disruption ,Parabharam ,Pallavaram ,MGR ,public ,Disappearance , Public, MGR Statue, Pallavaram
× RELATED இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 9ம்...