×

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் திருப்பூர் போராட்டம் குறித்த உத்தரவு நிறுத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூரை சேர்ந்த வக்கீல் கோபிநாத் தாக்கல் செய்துள்ள மனுவில், திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள்  கடந்த பிப்ரவரி 15 முதல் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் போராட்டம் நடத்திவரும் இடம் முக்கிய  சாலை சந்திப்பாகும். அந்த இடத்தில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. அனுமதியில்லாமல் அவர்கள் நடத்தும் போராட்டத்தால்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். போராட்டம் நடத்துபவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று  கூறப்பட்டிருந்தது.
 இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்த  அனுமதிக்கும் காவல்துறையின் செயல் ஏற்க கூடியதல்ல.  விரும்பிய இடத்தில் போராட்டம் நடத்த யாருக்கும் உரிமை இல்லை.

அவ்வாறு போராட  அனுமதித்தால் அது பேராபத்தை ஏற்படுத்திவிடும். திருப்பூரில் மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும்  மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் அனுமதியின்றி எந்தவொரு போராட்டமும் நடத்த போலீஸார்  அனுமதியளிக்கக்கூடாது. மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று கூறியிருந்தனர்.இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வக்கீல் வைகை, வக்கீல்கள் சங்கரசுப்பு, மோகன் உள்ளிட்டோர்  ஆஜராகி  உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவால் திரும்பூரில் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் பலரை கைது  செய்ள்ளனர். இந்த வழக்கை தொடர்ந்தவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளது. எனவே நேற்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய  வேண்டும் என்றனர். அப்போது அரசு பிளிடர் ஜெயபிரகாஷ் நாரயணன் ஆஜராகி அனுமதியில்லாமல் போராட்டங்கள் நடத்துபவர்கள் மீது  சட்டபூர்வரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

 வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரர் மீது ஏற்கனவே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.  எனவே, இந்த உத்தரவு நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அரசு சார்பில் அரசு பிளீடர் ஆஜராகி, அனுமதியின்றி போராட்டம்  நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். அதற்கு எந்த தடையும் இல்லை. இந்த பிரச்னை முக்கியமான பிரச்னை  என்பதால் ஏற்கனவே இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறுத்திவைக்கப்படுகிறது. இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட  வேண்டியுள்ளதால் விசாரணை வரும் 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Protests ,Citizenship Act Tirupur ,Chennai High Court , Protest ,citizenship law,Tirupur,Court orders
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...