×

ஆளும்கட்சி ஆதரவால் துணிச்சல் சென்னையில் வெடிகுண்டு கலாச்சாரம்: கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அண்ணா சாலையில் கடந்த 3ம் தேதி ரவுடிகள் சி.டி.மணி, காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் காரில்  சென்றபோது, 4 பைக்கில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் கார் மீது வெடிகுண்டுகளை வீசியது. துப்பாக்கியாலும் சுட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்க  தூதரகம் அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். அதில், வடசென்னையில் உள்ள ரவுடிகள் தம்பா,  செந்தில் ஆகியோர் காக்கா தோப்பு பாலாஜி, சி.டி.மணி ஆகியோரை கொலை செய்யும் நோக்கத்தோடு வந்து துணிச்சலாக வெடிகுண்டுகளை வீசி  விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. கடந்த சில நாட்களாகவே ரவுடிகள் துணிச்சலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர்  பள்ளிக்கரணை போலீஸ் எல்லைக்குட்பட்ட வேங்கைவாசல் என்ற இடத்தில் முத்து என்பவர் மீது ரவுடி ராஜேஷ் தலைமையிலான கும்பல்  வெடிகுண்டுகளை வீசி விட்டு சென்றது. பொதுமக்கள் அவர்களை விரட்டியதால், முத்து உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் ரவுடி  ராஜேஷை தேடி வந்தனர். இது தெரிந்ததும் ராஜேஷ் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதிமுக பிரமுகர் முருகனுக்கும், முத்துவுக்கும் முன்விரோதம் இருந்தது. அதனால் அவரை தீர்த்துக் கட்டுவதற்காகத்தான் வெடிகுண்டுகளை வீசி,  அரிவாளால் வெட்டியதாக ராஜேஷ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் முருகனை போலீசார் வழக்கில்  சேர்க்கவில்லை. கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் அவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் என்றும், அந்தப் பகுதியைச் சேர்ந்த அதிமுக  பிரமுகருக்கு வலதுகரமாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த அதிமுக பிரமுகருக்கும் பல போலீஸ் அதிகாரிகளுக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அதில் ஒரு போலீஸ் ஐஜி, தென்சென்னை இணை கமிஷனராக  இருந்தபோது, அவருக்கு இலவசமாக ஒரு ஏக்கர் நிலத்தை பள்ளிக்கரணை பகுதியில் மடக்கி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த  வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்தவுடன், அந்த போலீஸ் அதிகாரியே போன் செய்து, முருகனையோ, அதிமுக பிரமுகரையோ வழக்கில் சேர்க்கக்  கூடாது என்று கூறியதால்தான், முருகனை வழக்கில் சேர்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.அதேபோல, கடந்த மாதம் 2ம் தேதி பெரும்புதூர் அருகே உள்ள எருமையூரில் பாரத் என்பவரை கொலை செய்யும் நோக்கத்தோடு ஒரு கும்பல்  வீட்டுக்குள் வெடிகுண்டுகளை வீசியது. பொதுமக்கள் திரண்டதால் கும்பல் தப்பிச் சென்றது. குண்டு வீச்சில் பாரத் படுகாயமடைந்தார். அடுத்த நாள்,  குன்றத்தூரில் முருகன் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் வெடிகுண்டுகளை வீசி படுகொலை செய்யப்பட்டார். இந்த இரு வெடிகுண்டு வீச்சு  சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகள் ராஜேஷின் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. இரு வழக்குகளிலும் போலீசார் முறையாக விசாரணை  நடத்தியிருந்தால், பள்ளிக்கரணையில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்திருக்காது.

அதேபோல, ரவுடி சி.டி.மணி, தென்சென்னையில் தாதாவாக வலம் வருகிறான். அவனை சுட்டுப் பிடிக்க அப்போது தென் சென்னை இணை கமிஷனராக  இருந்த அருண் முயற்சி செய்தார். ஆனால் அவன் பிடிபட்டதும் சிறையில் அடைக்கப்பட்டான். போலீசுக்கு பயந்து பல மாதங்கள் சிறையில் இருந்து  வெளியில் வரவில்லை. தற்போது சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு சர்வ சாதாரணமாக வெளியில் சுற்றி வருகிறான் என்று கூறப்படுகிறது.  இவனுக்கு சென்னையில் உள்ள அதிமுக மாவட்டச் செயலாளர் ஒருவர் முழு ஆதரவுடன் இருப்பதாகவும், சில நாட்களுக்கு முன்னர் தி.நகரில் உள்ள  ஆந்திரா கிளப்பில் சி.டி.மணிக்கு விருந்தளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆளும் கட்சி ஆதரவுடன்தான் அவன் சென்னையில் பல மோதல்களை  அரங்கேற்றி வருவதாகவும், வீடுகளை காலி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

காக்கா தோப்பு பாலாஜியும், முன்பு வடசென்னையைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ஒருவருடன் நெருக்கமாக இருந்தான். கடந்த சட்டப்பேரவை  தேர்தலில் அவருக்காக வேலை செய்தான். பின்னர், அந்த பிரமுகர் டிடிவி.தினகரன் அணியில் சேர்ந்தார். இதனால் ஆளும் கட்சியை பகைத்துக்  கொள்ளக்கூடாது என்பதற்காக சி.டி.மணியுடன் சேர்ந்து சென்னையை கலக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.சென்னையில் ரவுடிகள் தற்போது மோதலில் ஈடுபடத் தொடங்கியுள்ளதால், ஆரம்பத்திலேயே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னையில் ரவுடிகள் தற்போது மோதலில் ஈடுபடத் தொடங்கியுள்ளதால், ஆரம்பத்திலேயே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Chennai , ruling party, Bomb Culture, Chennai,
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...