×

சென்னையில் பட்டப்பகலில் மீண்டும் பயங்கர மோதல் மாநில கல்லூரி மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு

* பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு
* 11 பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு வலை

சென்னை: இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாநில கல்லூரி மாணவன் ஒருவனுக்கு ஓட ஓட சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. சாலையில் பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி ரூட் தல மோதல் நடந்து வருகிறது. இதனால் மாணவர்கள் பட்டாக்கத்தி மற்றும் அரிவாள்களுடன் மோதிக்கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, அரும்பாக்கத்தில் மாநகர பேருந்தில் சென்ற இரண்டு கல்லூரி மாணவர்களிடயே சில நாட்களுக்கு முன்பு ரூட் தல மோதலில் ஒருவரை ஒருவர் பட்டாக்கத்தியால் வெட்டிக் கொண்டனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி மோதலில் ஈடுபடும் மாணவர்களை கட்டுப்படுத்த போலீசார் கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரிகளில் படித்து வரும்  90 ரூட் தல மாணவர்களை கணக்கெடுத்து அவர்களிடம் 107 சட்டப்பிரிவின் கீழ் போலீசார் ஓராண்டு ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர். அதன்பிறகு மாணவர்களின் மோதல் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஆவடியில் தங்கி உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை மாநில கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பழி வாங்க பச்சைய்யப்பன் கல்லூரி மாணவர்கள் 12 பேர் பட்டாக்கத்தி மற்றும் அரிவாளுடன் மாநில கல்லூரி மாணவர்களை வெட்ட தயாராக இருந்துள்ளனர். அதன்படி மாநில கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் திருமங்கலத்தை சேர்ந்த நேரு (19) நேற்று மதியம் வகுப்பு முடிந்து தனது நண்பர் பாலச்சந்திரனுடன் பைக்கில் வீட்டிற்கு சென்றுள்ளார். சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் செல்லும் போது, திடீரென 12 பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நடுரோட்டில் மாநில கல்லூரி மாணவன் நேரு வந்த பைக்கை வழிமறித்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத நேரு அவர்களிடம் இருந்து தப்பிக்க பைக்கை போட்டுவிட்டு ஓட முயன்றார். ஆனால் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் விடாமல் நேருவை சாலையில் ஓட ஓட துரத்தி ெசன்று வெட்டினர். இதில் மாணவன் நேருவுக்கு தலையில் 5 இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அப்போதும் விடாமல் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நேருவை அடித்து உதைத்தனர். உடன் வந்த மாணவன் பாலச்சந்திரன் உயிர் பிழைத்தால் போதும் என்று சம்பவ இடத்தில் இருந்து ஓடிவிட்டார்.

சினிமா காட்சிகளை போல் பட்டப்பகலில் சாலையில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு சிதறி ஓடினர். இதனால் நெல்சன் மாணிக்கம் சாலை போர்க்களம் போல் காட்சியளித்தது. பிறகு மாநில கல்லூரி மாணவன் நேருவின் பைக்கை பிடுங்கிக்கொண்டு 12 பேரும் மின்னல் வேகத்தில் மாயமாகினர்.தகவல் அறிந்த சூளைமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவன் நேருவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மாணவன் நேரு அளித்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், போலீசார் சம்பவம் நடந்த நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு ெசய்தனர் அப்போது, பச்சையப்பன் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் மாணவன் கார்த்திக் என்பவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவனிடம் இருந்து இரண்டரை அடி நீளமுள்ள பட்டாக்கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 11 பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சூளைமேட்டில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.



Tags : student ,state college student clashes ,Chennai ,state college student ,Terror Clash ,run , Terror clash ,Chennai,state college, student
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...