×

வணிகர்களிடம் நேரடியாக லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை: சென்னை கலெக்டரிடம் விக்கிரமராஜா மனு

சென்னை: வணிகர்களிடம் நேரடியாக லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கலெக்டரிடம் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உணவ சங்கத்தினர் மற்றும் உணவு பொருள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர் சங்கத்தினர், நுகர்வோர் சங்கத்தினர், பிற துறை அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்டு மாவட்ட அளவில் உணவு பாதுகாப்பு வழிநடத்து குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் கூட்டம் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சீத்தாலட்சுமி தலைமை தாங்கினார். இதில் வழி நடத்தும் குழுவின் உறுப்பினர்களும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னை மண்டல தலைவருமான கே.ஜோதிலிங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் கோரிக்கை மனுவை ேஜாதிலிங்கம், வி.பி.மணி ஆகியோர் கலெக்டர் சீத்தாலட்சுமியிடம் அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகளுக்கு சென்று நேரடியாக லஞ்சம் கேட்டு மிரட்டி வருகின்றனர். புதிதாக உரிமம் எடுப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் லஞ்சமாக ₹5000 முதல் ₹10,000 வரை கேட்கின்றனர். லஞ்சம் கொடுக்கவில்லை என்றால், தேவையற்ற பல காரணங்களை சுட்டிக்காட்டி வணிகர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால், வணிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, வியாபார இடையூறுகளையும் சந்தித்து வருகின்றனர். உணவு பாதுகாப்பு சட்டத்தின் உரிமம் புதுப்பித்தலில் உள்ள முரண்பாடுகளை களைந்திட உடனடியாக நடவடிக்கை எடுத்து, இயற்கையாக, இதர உரிமங்கள் புதுப்பித்தலில் உள்ள நடைமுறைகளை பின்பற்றுவது போல, இச்சட்டத்திலும் எளிதாக பின்பற்றும்படி திருத்தம் கொண்டுவர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vikramarajah ,Chennai ,collector ,Department , Bribe , Food Safety ,Department,Vikramarajah,
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...