×

ஒன்றிய தலைவர் தேர்தலில் மோதல் அதிமுக கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு: கோபி அருகே பரபரப்பு

கோபி: ஒன்றிய தலைவர் தேர்தலில் ஏற்பட்ட தகராறில் தி.மு.க.- அ.தி.மு.க.வினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 10 கவுன்சிலர்களில் தி.மு.க. கூட்டணியில் 7 பேரும், அ.தி.மு.க.வில் 3 பேரும் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து, நடைபெற்ற ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் நடராஜன் என்பவர் வாக்குப்பெட்டியை தூக்கி சென்றதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்ட திமுகவினர் புறக்கணித்தனர்.
அதைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக நடைபெற்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த விஜயலட்சுமி 6 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். தி.மு.க. கூட்டணியில் 7 கவுன்சிலர்கள் பேர் இருக்கும்போது தி.மு.க. வேட்பாளர் 4 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளதாக அதிகாரிகள் அறிவித்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

இதைதொடர்ந்து நேற்று முன்தினம் மாலை தி.மு.க. சார்பில் ‘அமைச்சர் செங்கோட்டையனின் அத்துமீறல்’ என்ற தலைப்பில் கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் முன்னாள் எம்.எல்.ஏ. கந்தசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினர் கார்களில் சென்று தி.மு.க.வினர் ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்து எறிந்தனர். எனினும் மீண்டும், நேற்று காலை கொங்கர்பாளையம் கிராமத்தில் தி.மு.க. தரப்பில் அதே சுவரொட்டியை சிலர் ஒட்டிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி, கவுன்சிலர் நடராஜன், ஒன்றிய செயலாளர் மனோகரன் ஆகியோர் சுவரொட்டியை ஒட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த கவுன்சிலர் நடராஜன், கோபிசெட்டிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நடராஜன், ஏற்னவே தேர்தலின்போது வாக்கு பெட்டியை துாக்கி கொண்டு ஓடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Conflict ,AIADMK ,election ,Councilor , Conflict ,union leader, election, AIADMK,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...