×

புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் கச்சத்தீவு திருவிழா துவங்கியது: தமிழக பக்தர்கள் 2,570 பேர் பங்கேற்பு

ராமேஸ்வரம்: கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 2,570 பக்தர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து படகுகளில் புறப்பட்டு  சென்றனர்.கச்சத்தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் புனித அந்தோணியார் ஆலய திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று மாலை துவங்கியது. இதில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் 2,570 பேர், 72 விசைப்படகுகள் மற்றும் 23 நாட்டுப்படகுகளில்  ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று கச்சத்தீவுக்கு சென்றனர். இதையொட்டி அதிகாலை 5 மணி முதல் ராமேஸ்வரம் துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச்சாவடியில், பக்தர்களின் ஆவணங்கள் மற்றும் உடமைகள் சோதனை செய்யப்பட்டது.

வருவாய், காவல் மற்றும் சுங்கத்துறையினரின் சோதனைக்குப்பின் பக்தர்கள் அனைவரும் படகுகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மீன்வளத்துறையினரால் வழங்கப்பட்ட உயிர்காப்பு மிதவைகளை அணிந்த பக்தர்களுடன், காலை 6.30 மணி முதல் படகுகள் ஒவ்வொன்றாக புறப்பட்டு கச்சத்தீவை நோக்கிச் சென்றன. ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ், டிஐஜி ரூபேஷ்குமார், எஸ்பி வருண்குமார், இந்திய கடலோர காவல்படை உதவி கமாண்டர் மணிக்குமார், மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரேமாவதி உள்ளிட்ட அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.ராமேஸ்வரம் முதல் இந்திய கடல் எல்லைப்பகுதி வரை பக்தர்களை ஏற்றிச் செல்லும் படகுகளுக்கு பாதுகாப்பாக, இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரின் ரோந்து கப்பல்களும், படகுகளும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தன.

பிற்பகல் 2 மணிக்கு கச்சத்தீவில் இறங்கிய பக்தர்கள், அந்தோணியாயர் ஆலயம் நோக்கி சென்றனர்.  மாலை 5 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டு திருவிழா துவங்கியது. இதையொட்டி அந்தோணியார் ஆலய வளாகத்தின் முன்புறம் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் ராமேஸ்வரம் மற்றும் நெடுந்தீவு பாதிரியார்களால், புனித அந்தோணியார் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டு முறைப்படி 2 நாள் திருவிழா துவங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு மேல் சிலுவைப்பாதை நிகழ்ச்சி, தொடர்ந்து இரவில் திருப்பலி பூஜையும் நடைபெற்றது. இலங்கை மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.



Tags : festival ,Kachchativu ,St. Anthony ,devotees ,Temple Kachchativu Festival , flag, St. Anthony's, Temple,participating
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...