×

சென்னை அண்ணாசாலையில் குண்டுவீச்சு தென்காசி கோர்ட்டில் மேலும் 3 பேர் சரண்

தென்காசி: சென்னை அண்ணா சாலையில் வெடிகுண்டு வீச்சு வழக்கில் தேடப்பட்ட 3 பேர், தென்காசி கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை 6 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.சென்னையின் மையப்பகுதியான அண்ணா சாலையில் அமெரிக்க துணை தூதரகம் அருகே கடந்த 3ம்தேதி, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கார் மீது 2 வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேனாம்பேட்டை இ.3 போலீசார் வழக்குப்பதிந்து, குண்டு வீசியவர்களை தேடி வந்தனர். இவ்வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கமருதீன்(30), ராஜசேகர்(28), பிரசாந்த்(25), ஜான் (எ) ஜான்சன்(35) ஆகியோர் மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தனர். 4 பேரையும் மார்ச் 11ம்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு, மாஜிஸ்திரேட் முத்துராமன் உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சென்னை தண்டையார்பேட்டை  ஒத்தவாடை அம்மணி அம்மன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாபு சதீஸ்(26), சேகர் மகன் தமிழ்ச்செல்வன் என்ற செல்வா(25), புதுவண்ணாரப்பேட்டை கேனியம்மன் கோயில் தெரு செந்தில் மகன் ஹரீஸ்(20) ஆகிய 3 பேர், தென்காசி மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்களை 6 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கவும் பின்னர் 3 பேரையும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும்  நீதிபதி பிரகதீஸ்வரன் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Tags : court bombing Bombing ,Tenkasi ,Chennai ,Anna Salai ,Tenkasi Court , Bombing ,Chennai Anna, Salai,Tenkasi Court
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...