×

பரங்கிமலை பயிற்சி அகாடமியில் இளம் ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சி: பார்வையாளர்கள் வியப்பு

சென்னை: பரங்கிமலை ஓடிஏ அகாடமியில் நேற்று பயிற்சி முடித்த ராணுவ வீரர்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சி நடந்தது. சென்னை பரங்கிமலையில் இளம் ராணுவ அதிகாரிகளுக்கான (ஓடிஏ) பயிற்சி அகாடமி இயங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடிந்து பணிக்கு செல்லும் இளம் ராணுவ வீரர்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில், இந்த ஆண்டு 178 இளம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு மற்றும் அணிவகுப்பு விழா இன்று பரங்கிமலை ராணுவ அகாடமி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தளபதி கரம்பீர்சிங் கலந்து கொண்டு, இளம் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்.

முன்னதாக, ஓடிஏ அகாடமி மைதானத்தில் இளம் ராணுவ வீரர்களின் பல்வேறு கண்கவர் வீர, தீர, சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. நிகழ்ச்சியை பயிற்சி மைய அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் கனல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதையடுத்து குதிரைகள் மீது சவாரி செய்தவாறு கொடி ஏற்றுதல், தடைகளை தாண்டுதல், நெருப்பு வளையத்துக்குள் புகுந்து வருவது போன்ற பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் இளம் ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டனர். பெங்களூருவில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் 4 பாராசூட்டுகளில் மைதானத்தின் மேல் பறந்தபடி தேசியக்கொடி மற்றும் ஓடிஏ கொடியை அசைத்தபடி சாகசம் செய்தபின் மைதானத்தில் தரையிறங்கினர். இதுபோன்ற பல கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் அங்கிருந்த பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.முடிவில், சிறப்பான சாகசங்களை செய்த இளம் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி மைய அதிகாரி பரிசு வழங்கி பாராட்டினார்.



Tags : Parangimalai Training Academy , Parangimalai, Training Academy, Surprise ,Visitors
× RELATED பரங்கிமலை பயிற்சி அகாடமியில் இளம்...