×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னையில் 5758 வாக்குச்சாவடிகள்: இறுதி பட்டியல் வெளியீடு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னையில் 5,758 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னையில் மாநகராட்சி 5758 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, கடந்த 14ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கடந்த 26ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியல்படி சென்னையில் மொத்தம் 5,758 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மட்டும் வாக்களிக்கும் வகையில் 135 வாக்குச்சாவடிகளும், பெண்கள் மட்டும் வாக்களிக்கும் வகையில் 135 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டன. அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் 5489 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த வாக்குச்சாவடி பட்டியல் ரிப்பன் மாளிகை, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் கடந்த 2ம் தேதி நடந்தது. இதில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த ஆட்சேபனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இறுதி வாக்குச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சென்னை மாநகராட்சி துணை ஆணையரும், மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலருமான குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு ஆகியோர் பட்டியலை வெளியிட்டனர். இதில் உதவி வருவாய் அலுவலர் மகேஷ் உள்ளிட்ட சென்னை மாநகராட்சி தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.இதன்படி மொத்தம் 5,758 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்கள் மட்டும் வாக்களிக்கும் வகையில் 134 வாக்குச்சாவடிகளும், பெண்கள் மட்டும் வாக்களிக்கும் வகையில் 134 வாக்குச்சாவடிகளும் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் 5490 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று முதல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்குகிறது. இதன்படி வரும் 19ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பணிகள் முடிந்தவுடன் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 20ம் தேதி வெளியிடப்படும்.


Tags : polling stations ,elections ,Chennai , urban local, elections, Final List Issue
× RELATED பதற்றமான வாக்குசாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு