×

இரண்டு மடங்கு கட்டணம் உயர்வு மலை ரயிலில் 7 பேர் மட்டுமே பயணம்

குன்னூர்: நீலகிரி மலைரயில் கட்டணத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளதால், நேற்று குன்னூரில் இருந்து 7 சுற்றுலா பயணிகள் மட்டுமே மலை ரயிலில் பயணம் செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடு மற்றம் வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த மார்ச் 1ம் தேதில் முதல் மலை ரயில் கட்டணத்தை தெற்கு ரயில்வே இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது. இதற்கு முன் குன்னூர் ஊட்டி இடையே 35 ரூபாய் வசூலிக்கப்பட்ட கட்டணம் தற்போது 80 ரூபாயாகவும், முதல் வகுப்பிற்கான கட்டணம் 185 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தினந்தோறும் மலை ரயிலில் பயணித்து வந்த உள்ளூர் வாசிகள் பயணம் மேற்கொள்வதை நிறுத்தியுள்ளனர். இதனால் மலை ரயிலில் பயணிகளின்றி நேற்று 7 பயணிகளுடன் ரயில் இயக்கப்பட்டது. மலை ரயிலில் பயணிக்க தினந்தோறும் இடமின்றி சுற்றுலா பயணிகள் சென்று திரும்பிய காலம் போய் தற்போது முதல் முறையாக மிக குறைவான பயணிகளுடன் மலை ரயில் இயங்கியுள்ளது.

இதுகுறித்து உள்ளூர் பயணிகள் கூறுகையில், தினமும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் சென்று வந்தோம். தற்போது மலை ரயில் கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் ரயில் பயணம் செய்வதை தவிர்த்து பேருந்துகளில் சென்று வருகிறோம். எனவே உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைத்து மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றனர்.

Tags : Mountain Train
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...